பிற விளையாட்டு

மாநில ஜூனியர் கைப்பந்து சென்னை பெண்கள் அணி ‘சாம்பியன்’ + "||" + State Junior Volleyball Chennai girls team champion

மாநில ஜூனியர் கைப்பந்து சென்னை பெண்கள் அணி ‘சாம்பியன்’

மாநில ஜூனியர் கைப்பந்து சென்னை பெண்கள் அணி ‘சாம்பியன்’
46-வது மாநில ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திருவாரூரில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
சென்னை,

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் மற்றும் திருவாரூர் மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் 46-வது மாநில ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திருவாரூரில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதன் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை-சேலம் மாவட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 26-24, 28-26, 25-20 என்ற நேர்செட்டில் சேலத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் திருவாரூர்-திருச்சி அணிகள் சந்தித்தன. இதில் திருவாரூர் அணி 25-15, 25-20, 25-18 என்ற நேர்செட்டில் திருச்சியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.


பரிசளிப்பு விழாவுக்கு வேலுடையார் கல்வி குழும தலைவர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி தலைமை தாங்கினார். திருச்சி சிவா எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மன் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். நேபாள தலைநகர் காத்மண்டுவில் கடந்த மாதம் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய கைப்பந்து அணியில் இடம் பிடித்து இருந்த தமிழக வீரர்கள் உக்கிரபாண்டி, மனோஜ், மிதுன் ஆகியோர் இந்த போட்டியின் போது கவுரவிக்கப்பட்டனர்.