மேரிகோம், சிந்து, ஜாகீர்கான் உள்பட 8 விளையாட்டு பிரபலங்களுக்கு பத்ம விருது


மேரிகோம், சிந்து, ஜாகீர்கான் உள்பட 8 விளையாட்டு பிரபலங்களுக்கு பத்ம விருது
x
தினத்தந்தி 26 Jan 2020 12:19 AM GMT (Updated: 26 Jan 2020 12:19 AM GMT)

மேரிகோம், சிந்து, ஜாகீர்கான் உள்பட 8 விளையாட்டு பிரபலங்களுக்கு பத்ம விருது வழங்கப்பட உள்ளது.

புதுடெல்லி,

பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு நேற்று பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த 8 பேர் கவுரவிக்கப்படுகிறார்கள்.

உலக குத்துச்சண்டையில் 6 முறை மகுடம் சூடி சரித்திரம் படைத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பத்ம விபூஷண் விருது பெறுகிறார். மணிப்பூரைச் சேர்ந்த 36 வயதான மேரிகோம் ஏற்கனவே பத்ம ஸ்ரீ (2006-ம் ஆண்டு), பத்ம பூஷண் (2013-ம் ஆண்டு) விருதுகளை பெற்று இருக்கிறார்.

உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்த ஒரே இந்தியரும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட முன்னாள் வீரர் ஜாகீர்கான் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார். ஜாகீர்கான் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியில் அங்கம் வகித்தவர் ஆவார்.




 

இந்திய பெண்கள் ஆக்கி அணியை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வைத்ததில் முக்கிய பங்கு வகித்த அந்த அணியின் கேப்டன் ராணி ராம்பாலும் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார். இதே போல் இந்திய பெண்கள் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பெம்பெம் தேவி, முன்னாள் ஆக்கி வீரர் எம்.பி.கணேஷ், துப்பாக்கி சுடுதல் வீரர் ஜிது ராய், வில்வித்தை வீரர் தருண்தீப் ராய் ஆகியோரும் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள்.

Next Story