தேசிய பளுதூக்குதல்: மீராபாய் சானு புதிய சாதனை


தேசிய பளுதூக்குதல்: மீராபாய் சானு புதிய சாதனை
x
தினத்தந்தி 5 Feb 2020 12:21 AM GMT (Updated: 5 Feb 2020 12:21 AM GMT)

தேசிய பளுதூக்குதல் போட்டியில், மீராபாய் சானு புதிய சாதனை படைத்தார்.

கொல்கத்தா,

தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் 25 வயதான மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு ‘ஸ்னாட்ச்’ முறையில் 88 கிலோவும், ‘கிளன் அண்ட் ஜெர்க்’ முறையில் 115 கிலோவும் என மொத்தம் 203 கிலோ எடை தூக்கி புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் 201 கிலோ எடை தூக்கியதே தேசிய சாதனையாக இருந்தது. மீராபாய் சானு தனது சொந்த சாதனையை நேற்று தகர்த்து புதிய சாதனை படைத்தார். அவர் 2017-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். 203 கிலோ எடை தூக்கியதன் மூலம் மீராபாய் சானு உலக தரவரிசையில் 4-வது இடத்தை பிடித்தார்.

வெற்றிக்கு பிறகு மீராபாய் சானு அளித்த பேட்டியில், ‘எங்களது திட்டத்தின் படி எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 206-207 கிலோ எடை தூக்க வேண்டும் என்பதே இலக்காகும். ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 210 கிலோ எடையை தூக்க முடியும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 21 வயதான தமிழக வீரர் அஜித் ‘ஸ்னாட்ச்’ முறையில் 140 கிலோவும், ‘கிளன் அண்ட் ஜெர்க்’ முறையில் 170 கிலோவும் என மொத்தம் 310 கிலோ எடை தூக்கி தேசிய சாதனை படைத்ததுடன், நடப்பு சாம்பியனும், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான மேற்கு வங்காளத்தின் அசிந்தா ஷீலியை (306 கிலோ) பின்னுக்கு தள்ளி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

Next Story