அன்று... சைக்கிள் திருடன் இன்று... கால்பந்தின் மன்னன்


அன்று... சைக்கிள் திருடன் இன்று... கால்பந்தின் மன்னன்
x
தினத்தந்தி 8 Feb 2020 2:30 AM GMT (Updated: 7 Feb 2020 10:04 AM GMT)

அர்ஜென்டினாவின் வீதிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்களைக் கண்டுவிட முடியும். மெஸ்ஸியையும் பார்சிலோனாவையும் ஆதரிக்கும் ரசிகர்கள் போர்ச்சுக்கல் நகரங்களில் நிச்சயம் இருப்பார்கள். ஆனால், இந்த இருவரையும் கொண்டாடாத ஓர் ஊர் இருக்கிறது. அது மால்மோ, சுவீடனில் உள்ள ஒரு நகரம்.

மால்மோ ஊர் சிறுவர்களைப் பொறுத்தவரை ‘அவர்' ஒருவர்தான் ரோல்மாடல்; அவர்தான் கால்பந்தின் ஹீரோ. அவர்கள் கொண்டாடும் ஒரே பெயர் `ஸ்லாடன்' (ZLATAN). தங்கள் நகரத்தில் பைக் திருடிக்கொண்டிருந்து, பிறகு உலகம் வியக்கும் ஒரு நட்சத்திரமாக உயர்ந்து, வறுமையில் வாடும் தங்களையெல்லாம் சாதிக்கத் தூண்டும் அவர்தான் அவர்களுக்கு `கால்பந்துக் கடவுள்'. அந்த அளவிற்கு புகழப்படும் ஸ்லாடன் இப்ராஹிமோவிச் - கால்பந்து உலகின் `தனி ஒருவன்'!

மெஸ்ஸியின் ட்ரிபிள், ரொனால்டோவின் ஸ்கில்ஸ், பெக்காமின் ப்ரீ- கிக், ஜிடேனின் பாஸ் ஆகியவற்றைக் கண்டு சிலாகித்துக்கொண்டே இருப்பான் கால்பந்து வெறியன். அவனிடம் சென்று `ஸ்லாடனிடம் என்ன பிடிக்கும்?' எனக் கேட்டால், புன்னகையே பதிலாக வரும். காரணம், அவனால் ஸ்லாடனின் ஸ்பெஷல்களைப் பட்டியலிட முடியாது. ஏனெனில், அவர் ஒரு வாழும் மியூசியம். அவரது ஒவ்வொரு செயலும் அசைவும் வித்தியாசமானவை, கொஞ்சம் விநோதமானவை, தனித்துவம் வாய்ந்தவை, ஒவ்வொன்றும் ரசிக்கத் தூண்டுபவை. களத்தில் இறங்கினால் கோல்கள் பறக்கும். பேட்டி கொடுத்தால் மைக்குகள் தெறிக்கும். இப்படி கால்பந்து உலகம் கண்ட தனித்துவமான வீரராக ஸ்லாடன் விளங்குகிறார்.

அனைவரும் ஆடுவதைப்போல் ஆடுவது அவரது ஸ்டைல் அல்ல. அவரது ஸ்டைல் தனி ஸ்டைல். அவரது ஆட்டம் தனியாகத் தெரியும். எப்பேர்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும் தங்கள் ஸ்கில்களை பாக்ஸுக்கு வெளியேதான் காட்டுவார்கள். பாக்ஸுக்குள் கோலடிக்க முயல்வது வழக்கமான ஷாட்கள் மூலம்தான். ஆனால், ஸ்லாடன் பாக்ஸுக்குள்தான் வித்தையே காட்டுவார். காலணியின் அடிப்பகுதியைக் கொண்டுகூட பல கோல்கள் அடித்து அசத்தியவர். `குங்பூ கிக்' ஸ்லாடனின் ஸ்பெஷல்களில் ஆகச்சிறந்தது. டேக்வாண்டோ கற்றுத் தேர்ந்தவராயிற்றே. ஆனால், அவற்றையெல்லாம்விட ஸ்பெஷல் அவரது நடத்தைதான்.

இவரைப் போன்ற நடத்தை கொண்டுள்ள ஒரு வீரரைக் கண்டுவிட முடியாது. தற்பெருமைகொண்டவர், கோபக்காரர், சண்டைக்கோழி. சொற்களால் மட்டுமல்ல, நேரடியாகவும் பலரைத் தாக்கி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் ஸ்லாடன். சர்வதேசப் போட்டி ஒன்றில் ஆடியபோது, தனது கிளப் வீரரைத் தாக்கினார். பயிற்சியின்போது சொந்த அணி வீரர் களையே தாக்கியுள்ளார். போட்டிகளில் எதிர் அணி வீரர்களைப் பதம் பார்த்துள்ளார். பலரையும் அடித்துள்ளார், உதைத்துள்ளார், மிதித்துள்ளார். ஏழ்மையை, வறுமையை, புறக்கணிப்பை அனுபவித்து வந்தவர். வாழ்க்கையின் மறுமுகத்தை, கோரமுகத்தை அருகில் நின்று பார்த்து உணர்ந்தவர்.

ஸ்லாடனின் அப்பா, போஸ்னியாவைச் சேர்ந்தவர். அம்மா குரோஷியா. 1981-ம் ஆண்டில் ஸ்லாடன் பிறந்தார். இரண்டே ஆண்டுகளில் இருவரும் விவாகரத்துப் பெற்றனர். உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர். முதலில் அம்மாவுடன்தான் இருந்தார். அரவணைப்பு கிடைக்கவில்லை. பல நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட, வெளியில் இருந்த மைதானம் அவருக்கு உறைவிடம் ஆனது. சிறிது காலத்தில் உலகமாகவும் ஆனது. ஒரு பிரச்சினை காரணமாக அப்பாவிடம் வளரத் தொடங்கினார். தனிமையும் ஏழ்மையும் மொத்தமாக அவரை ஆட்கொண்டது. ரோஷன்கார்ட் நகரச் சிறுவர் களோடு சேர்ந்துகொண்டு சைக்கிள், பைக்குகள் திருடத் தொடங்கினார். கால்பந்து பொழுதுபோக்காகவும், திருட்டு ஒரு தொழிலாகவும் மாறிப்போனது.

``அவன் நல்ல திறமையான திருடன்'' என்று அவருடைய நண்பர்களே கூறுகிறார்கள். கால்பந்து பயிற்சியாளரின் கவனம் தன் மீது விழ, அவர் வண்டியையே களவாடிச் சென்றாராம் இளம் ஸ்லாடன். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக கால்பந்தின் மீது கவனம் செலுத்த, தன் கோபம், முரட்டுத்தனத்துக்கெல்லாம் களத்தில் வடிவம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார். மெஸ்ஸி, ரொனால்டோவை போல் தன் பதின் பருவத்திலேயே பெயர் பெற்றவர் அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கிக்கொண்டார். இதோ இன்று 33 பதக்கங்கள் வென்று, கிளப்களுக்காக அதிகப் பதக்கங்கள் வென்றவர்கள் பட்டியலில் அவர்களுக்கு முன் நிற்கிறார்.

இப்படியொரு சூழலில், பின்புலத்திலிருந்து வந்ததால்தான் ஸ்லாடனிடம், அந்தக் கடுமையான குணம், சண்டையிடும் போக்கு அனைத்தும் மிகுதியாக இருக்கின்றன. தன் பிரச்சினைகளில்இருந்து மீண்டு வர, இவர் ரோல்மாடலாக கொண்டது குத்துச்சண்டை வீரர் முகமது அலியை. அவரது போர்க் குணம் அப்படியே ஸ்லாடனுக்குள் புகுந்தது. தன்னை நிலைநாட்டிக்கொள்ள தன் பலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று புரிந்துகொண்டதால் போராளியாகவே தன்னை வெளிப்படுத்தினார்.

சுவீடன் அகராதியில், `ஆகச்சிறந்த திறமையால் ஒரு செயலைச் செய்வது' என்பதைக் குறிக்க `To Zlatan' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. அந்த அளவுக்கு அவரது சுபாவம் பலம்வாய்ந்தது. ஸ்லாடனின் சண்டை களைவிட, சச்சரவுகளை விட ஸ்லாடனின் பேட்டிகள் எல்லாம் மரண வைரல். அதற்காகவே அவரது ரசிகர்கள் ஆனவர்களும் உண்டு. கூகுளில் `Zlatan quotes' என டைப் செய்தால் போதும், அருவியாகக் கொட்டும். அந்தப் பேட்டிகள்கூட ஸ்லாடனின் தனித்துவத்தை அழகாக எடுத்துரைக்கும்.

ஆர்சனல் கிளப், ப்ரீமியர் லீகில் மாபெரும் சக்தியாகக் கிளம்பிக்கொண்டிருந்தது. கால்பந்து அணிகள் இளம் வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னோட்டம் பார்ப்பது வழக்கம். ஆர்சனல் அணியின் பயிற்சியாளர் ஆர்சன் வெங்கர், ஸ்லாடனை முன்னோட்ட பயிற்சிக்கு அழைக்கிறார். மாபெரும் அணியின் மிகச்சிறந்த பயிற்சியாளரான அவரை புறக்கணிக்கிறார் ஸ்லாடன். வெங்கருக்கு ஆச்சரியம்.. அதிர்ச்சி! `ஸ்லாடன் பயிற்சிக்கு எல்லாம் வர மாட்டான்' என்று ஸ்லாடன் கூறியபோது, அவருக்கு வயது 17. அந்த சமயத்தில் வெங்கருக்குச் சொன்ன பதில் ஒட்டு மொத்த கால்பந்து உலகையும் ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த தில், அந்த கெத்து.. அதான் ஸ்லாடன்!

அவர் எப்போது பேசினாலும், தன்னையே மூன்றாம் நபர் போலத்தான் குறிப்பிடுவார். உதாரணமாக, `இது என்னுடையது' என்று கூற மாட்டார். `இது ஸ்லாடனுடையது' என்பார். இப்படி அனைத்திலும் அவர் தனித்துவமானவர். தன்னை எந்த இடத்திலும் உயர்த்தித்தான் பேசுவார். தனக்கு மேலானவர் எவருமே இல்லை என நினைப்பவர். பொதுவாகவே `நான்' என்ற அகந்தையை வெறுக்கும் இந்த உலகம், ஸ்லாடனின் அகந்தையை மட்டும் ரசிப்பது விநோத முரண்.

மூர்க்கத்தனமும் தற்பெருமையும் நிறைந்தவர் என அவரை ஒதுக்கிவிட முடியாது. இதுதான் ஸ்லாடன் என்று நீங்கள் நினைத்தால், அது அல்ல அவர். ஏனெனில், ``என்னால் அமைதியாகவும் இருக்க முடியும்” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறி யிருந்தார். பலமுறை தனக்குள் உறங்கிக்கொண்டிருந்த அந்த `ஸ்வீட்' மிருகத்தையும் நடமாடவிட்டுள்ளார். 2015-ம் ஆண்டு ஒரு போட்டியில் கோல் அடித்த ஸ்லாடன், அதைக் கொண்டாட தன் ஜெர்சியைக் கழற்றினார். வழக்கமாக அவர் உடலை அலங்கரித்திருக்கும் டாட்டூக்களுக்கு நடுவே பல புதிய தற் காலிக டாட்டூக்கள். பெயர்கள்போல் தெரிந்தன. ஆம், உலகெங்கும் பசியால் செத்துக்கொண்டிருக்கும் 50 பேரின் பெயர்களை தன் உடலில் பச்சை குத்தியிருந்தார் இந்தச் சண்டைக்காரர். பசியின் கொடுமையை உலகுக்கு உணர்த்த..

மாற்றுத்திறனாளிகள் உலககோப்பை கால்பந்துக்கு சுவீடன் வீரர்களை அனுப்ப நிதி இல்லை. சுவீடன் சீனியர் அணி வீரர்களின் ஜெர்சிகளை வாங்கி, அதை ஏலத்தில்விட்டு பணம் ஏற்பாடு செய்யத் திட்டுமிட்டு வீரர்களிடம் கேட்டிருக்கிறார்கள். ஒருசில வீரர்கள் அதற்கு உதவ, தங்கள் ஜெர்சியை அளித்தனர். ஸ்லாடனிடம் வந்து கேட்கிறார்கள். அவருக்குக் கோபம். ``ஒரு ஜெர்சி எவ்வளவு தொகை பெற்றுத் தரும்?” என்று கத்திக்கொண்டே 51,000 அமெரிக்க டாலர்களை எடுத்து நீட்டுகிறார்.

அவர் தன் ஜெர்சியில் `இப்ராஹிமோவிச்' என்று எழுத, காரணம் இருக்கிறது. தன் தாயின் மதத்தைப் பின்பற்றுபவர் ஏன் தந்தை வழி வந்த பெயரைக்கொண்டிருக்க வேண்டும்? அதுதான் தான் எங்கிருந்து வந்தார் என்பதற்கான அடையாளம் என்கிறார்.

தான் வளர்ந்த இடத்திலிருந்து இன்னொருவன் பைக் திருடப் போய்விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். அதனால் ரோஷன்கார்டில், சிறுவர்கள் விளையாட `ஸ்லாடன் கோர்ட்' என்ற சிறு கால்பந்து அரங்கம் அமைத்துக்கொடுத்துள்ளார். தான் முதன்முதலாக விளையாடிய அணிக்கு இன்னும் உதவி வருகிறார். அவரைப் பொறுத்தவரை தன்னால் முடிந்தது, அங்குள்ள எந்தச் சிறுவனாலும் முடியும். அவர்கள் அனைவரும் தான் தொட்ட உயரம் தொட வேண்டும், அவ்வளவே. இந்தக் குணங்கள்தான் அவரின் நெகட்டிவ்களை முற்றிலுமாகப் புறந்தள்ளி அவரை ரசிக்கவைக்கிறது; அவருக்கு வெற்றியை வழங்கியது. ஸ்லாடன் செய்த பல சாதனைகள் யாராலும் செய்ய முடியாதவை. சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆறு அணிகளுக்காக கோல் அடித்துள்ள ஒரே ஆள் ஸ்லாடன்தான். இந்த ஆண்டு அது ஏழாகக்கூட ஆகலாம். இந்தச் சாதனை களைத் தாண்டி ஸ்லாடனின் கோல்கள், அவர் செய்து சாகசங்கள் வேற லெவல்.

ஸ்லாடன் ஒருமுறை சொன்னது, ``நான் கண்ணாடி முன்பு நின்றால், என் கண்களுக்கு எதுவுமே தெரியாது. ஏனெனில், இந்த உலகத்தில் ஒரே ஒரு ஸ்லாடன்தான்” என்றார். உண்மை. மெஸ்ஸிக்கு முன்பு மரடோனா இருந்தார். இப்போது நெய்மார். கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு முன்பு ரொனால்டோ நஸாரியோ இருந்தார். இப்போது எம்பாப்பே எழுந்துகொண்டிருக்கிறார். எப்படிப்பட்ட வீரனைப்போலவும் முன்பு ஒருவர் இருந்துள்ளனர். புதிதாக ஒருவர் பிறக்கிறார். ஆனால், ஸ்லாடனைப்போல்! அவருக்கு முன்பும் அப்படி ஒருவர் இருந்ததில்லை. இனியும் ஓர் ஆள் பிறக்கப்போவதில்லை.

Next Story