விக்கெட்டுகளை வீழ்த்த பும்ரா இன்னும் ஆக்ரோஷமாக பந்து வீச வேண்டும் - துளிகள்


விக்கெட்டுகளை வீழ்த்த பும்ரா இன்னும் ஆக்ரோஷமாக பந்து வீச வேண்டும் - துளிகள்
x
தினத்தந்தி 13 Feb 2020 11:44 PM GMT (Updated: 13 Feb 2020 11:44 PM GMT)

விக்கெட்டுகளை வீழ்த்த பும்ரா இன்னும் ஆக்ரோஷமாக பந்து வீச வேண்டும். கூடுதல் ரிஸ்க் எடுக்க வேண்டும்’ என்று இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் ஜாகீர்கான் கூறியுள்ளார்.

* ‘இந்திய கேப்டன்களில் சிறந்தவர் டோனி தான். எதையும் செய்ய முடியும் என இந்திய அணியை மாற்றிய அந்த சிறந்த கேப்டன் இப்போது எங்களிடம் (சென்னை சூப்பர் கிங்ஸ் அணி) இருக்கிறார்’ என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த ஐதராபாத் எப்.சி.- ஜாம்ஷெட்பூர் எப்.சி. இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி பின்தங்கி இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் சுமித் பாசி கோல் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஒடிசா- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

* ஆசிய அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்சில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி நேற்று நடந்த ஆட்டத்தில் 1-4 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் தவிர மற்ற அனைவரும் தோல்வியை தழுவினர்.

* ‘ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் 10 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தால் கூட பரவாயில்லை. அவரது பந்து வீச்சில் விக்கெட்டை இழந்து விடாமல் இருந்தால், மற்ற பவுலர்களின் பந்து வீச்சில் ரன்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று அணிகள் கருதுகின்றன. இதை பும்ரா புரிந்து கொள்ள வேண்டும். விக்கெட்டுகளை வீழ்த்த பும்ரா இன்னும் ஆக்ரோஷமாக பந்து வீச வேண்டும். கூடுதல் ரிஸ்க் எடுக்க வேண்டும்’ என்று இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் ஜாகீர்கான் கூறியுள்ளார்.

*3 2-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளிவைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாயின. இதனை போட்டி அமைப்பு குழு தலைவர் யோஷிரோ மோரி மறுத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்வது குறித்தோ? அல்லது அதை தள்ளிப்போடுவது பற்றியோ? பரிசீலனை செய்யவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவாக தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்குரிய டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக வலைதள பக்கத்தில் உள்ள முகப்பு படம் திடீரென நீக்கப்பட்டு வெறுமனே காட்சி அளிக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, தன்னிடம் கூட இது பற்றி அணி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார். அதே சமயம் புதிய மாற்றங்களை செய்யப்போவதாக அந்த அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story