ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்


ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:53 PM GMT (Updated: 14 Feb 2020 10:53 PM GMT)

ஆசிய அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்து வருகிறது.

மணிலா,

ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, தாய்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்திய அணிக்கு குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் 14-21, 21-14, 12-21 என்ற செட் கணக்கில் கன்டாபோன் வான்சரோனிடம் தோல்வி அடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 20-22, 14-21 என்ற நேர்செட்டில் குன்லாவுத் விதித்சர்னிடம் பணிந்தார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடி 21-18, 22-20 என்ற நேர்செட்டில் கிட்டின்போங் கெட்ரென்-தனுபாத் விரியங்குரா இணையை வீழ்த்தியது. ஒற்றையர் பிரிவில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 21-19, 21-18 என்ற நேர்செட்டில் சுப்பான்யு அவிஹிங்சனோனை சாய்த்தார். மற்றொரு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-ஸ்ரீகாந்த் இணை 21-15, 16-21, 21-15 என்ற செட் கணக்கில் மனீபோங் ஜோங்ஜித்-நிபித்போன் ஜோடியை வீழ்த்தி அணி வெற்றியை ருசிக்க உதவியது. அரைஇறுதியில் இந்திய அணி, பலம் வாய்ந்த அணியான நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவை சந்திக்கிறது.

Next Story