2 புதிய தேர்வாளர்கள் நியமனம்: இந்திய கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி உறுப்பினர் மதன்லால் பேட்டி - துளிகள்


2 புதிய தேர்வாளர்கள் நியமனம்: இந்திய கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி உறுப்பினர் மதன்லால் பேட்டி - துளிகள்
x
தினத்தந்தி 17 Feb 2020 11:27 PM GMT (Updated: 17 Feb 2020 11:27 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின், நியூசிலாந்து பயணம் முடிவதற்குள் 2 புதிய தேர்வாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். சரியான நபர்கள் தேர்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

* இந்திய கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி உறுப்பினர் மதன்லால் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், உறுப்பினர் ககன் கோடா ஆகியோருக்கு பதிலாக புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பதவிக்கு 44 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின், நியூசிலாந்து பயணம் முடிவதற்குள் 2 புதிய தேர்வாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். சரியான நபர்கள் தேர்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.

* கெய்ன்ஸ் கோப்பை செஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிசில் நடந்தது. இதன் 9-வது மற்றும் கடைசி சுற்றில் உலக ரேபிட் சாம்பியனான இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி, சக நாட்டு வீராங்கனை ஹரிகாவுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதன் மூலம் மொத்தம் 6 புள்ளிகள் பெற்ற கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 5.5 புள்ளிகள் பெற்ற சீன வீராங்கனை வென்ஜூன் ஜூ 2-வது இடத்தை பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் கோனேரு ஹம்பி உலக தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினார். சாம்பியன் பட்டம் வென்ற கோனேரு ஹம்பிக்கு ரூ.32 லட்சம் பரிசாக கிடைத்தது.

* 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் (4 நாள் ஆட்டம்) ‘எலைட் பி’ பிரிவில் தமிழ்நாடு-மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் முறையே தமிழக அணி 250 ரன்னும், மத்தியபிரதேச அணி 450 ரன்னும் எடுத்தன. 200 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி 2-வது இன்னிங்சில் 404 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மத்திய பிரதேச அணி 50.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சோனிபட்டில் நடந்த தேசிய ஓபன் ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியானா வீரர் அமித் தாஹியா வெண்கலப்பதக்கம் வென்றார். அவரை ஊக்க மருந்து சோதனைக்கு வருமாறு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அதிகாரிகள் அழைத்தனர். ஆனால் அவர் தனக்கு பதிலாக வேறு ஒருவரை அனுப்பி வைத்து சோதனை மாதிரி அளித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்திய தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அமித் தாஹியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

* கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் கம்பளா போட்டி பிரசித்தி பெற்றதாகும். உழவில் எருதுகளை பூட்டி கயிற்றை பிடித்தபடி சேரும், சகதியுமான பாதையில் வீரர் இலக்கை நோக்கி ஓடுவதே கம்பளா போட்டியாகும். இதில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டும் வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். கடந்த வாரம் உடுப்பி அருகே நடந்த கம்பளா போட்டியில் சீனிவாச கவுடா என்ற வீரர் 145 மீட்டர் தூரத்தை 13.62 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். அவர் 100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடியில் கடந்தார். ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் 9.58 வினாடியில் கடந்ததே உலக சாதனையாக இருக்கிறது. இதனால் சீனிவாச கவுடா, உசேன் போல்டை விட வேகமாக ஓடியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாயின. அவருக்கு பிரபலங்களின் பாராட்டும் குவிந்தது. இதனை அடுத்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சியாளர்கள் சீனிவாச கவுடாவுக்கு உடல் தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் சீனிவாச கவுடா நேற்று பெங்களூருவில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்தார். அப்போது அங்கு சென்ற சாய் அதிகாரிகள் சீனிவாச கவுடாவை சாய் மையத்துக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் தனக்கு தடகளத்தில் ஆர்வமில்லை என்று கூறி மறுத்து விட்டார். அத்துடன் அவர் காயம் அடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

* ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி அடுத்த ஆண்டு (2021) இறுதியில் இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பாகிஸ்தானில் நடந்த உலக கோப்பை சர்க்கிள் கபடி போட்டியில் இந்திய அணி பங்கேற்றது. அரசின் அனுமதி பெறாமல் இந்த போட்டியில் இந்திய கபடி அணி கலந்து கொண்டது சர்ச்சையானது. இது குறித்து இந்திய கபடி சம்மேளனம் விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story