ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி
x
தினத்தந்தி 29 Feb 2020 11:44 PM GMT (Updated: 29 Feb 2020 11:44 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.


* பார்ல் நகரில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது. ஹென்ரிச் கிளாசென் தனது முதலாவது சதத்தை (123 ரன், 114 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) எட்டினார். அடுத்து 292 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடியது. முடிவில் ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

*பெண்களுக்கான சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் மே மாதம் ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்று நடைபெறும் சமயத்தில் அரங்கேறுகிறது. 4 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடைபெற இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

* வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் இன்று (பிற்பகல் 2.30 மணி) நடக்கிறது. முன்னதாக முதல் இரண்டு ஆட்டங்களில் இலங்கை வெற்றி பெற்றது.

* வலது கணுக்காலில் மீண்டும் காயம் அடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா (டெல்லி டேர்டெவில்ஸ் அணி) ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடக்க கட்ட ஆட்டங்களை தவற விடலாம் என்ற தெரிகிறது.

*ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறிய நிலையில், இடம் மாற்றம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணி தெரிவித்துள்ளார்.


Next Story