கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி; உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தள்ளிவைப்பு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி; உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 7 March 2020 2:22 AM GMT (Updated: 7 March 2020 2:22 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக துப்பாக்கி சுடுதல் போட்டி தள்ளி வைக்கப்படுவதாக இந்திய ரைபிள் சங்கம் நேற்று அறிவித்தது.

புதுடெல்லி, 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் வருகிற 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்க இருந்தது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பலர் உயிரிழந்து வருகிறார்கள். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தென்படுகிறது. இந்த உயிர்க்கொல்லி நோய் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து பல நாடுகள் விலகின. சீனா, இத்தாலி, தென்கொரியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளுக்கு இந்த போட்டியில் பங்கேற்க மத்திய அரசு விசா வழங்க மறுத்து விட்டது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக துப்பாக்கி சுடுதல் போட்டி தள்ளி வைக்கப்படுவதாக இந்திய ரைபிள் சங்கம் நேற்று அறிவித்தது. ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக இந்த போட்டி இரண்டு பகுதியாக நடத்தப்படும் என்றும், இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்திய ரைபிள் சங்கம் தெரிவித்தது. இந்த நிலையில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி இரண்டு பகுதியாக நடத்தப்படும் தேதியை சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதன்படி ரைபிள் மற்றும் பிஸ்டல் போட்டிகள் மே 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையும், ஷாட்கன் போட்டிகள் ஜூன் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 16-ந் தேதி தொடங்க இருந்த ஒலிம்பிக் சோதனை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story