அமித் பன்ஹால், மேரிகோம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி


அமித் பன்ஹால், மேரிகோம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
x

ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் அமித் பன்ஹால், வீராங்கனை மேரிகோம் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

அம்மான்,

ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் அமித் பன்ஹால், வீராங்கனை மேரிகோம் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவின் கால் இறுதியில், கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் அமித் பன்ஹால், பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோ பாலமை சந்தித்தார். இதில் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் கார்லோ பாலமை வீழ்த்தி அரைஇறுதிக்குள் தடம் பதித்ததுடன், முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். 63 கிலோ எடைப்பிரிவில் கால் இறுதியில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 2-3 என்ற கணக்கில் மங்கோலியாவின் சின்சோரிக் பாதர்சுக்கிடம் வீழ்ந்தார்.

பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் 5-0 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஷ் மாக்னோவை எளிதில் தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். அத்துடன் அவர் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பையும் உறுதி செய்தார். 60 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் மோங்ஹோர்ன் நமுனை தோற்கடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதியில், முன்னாள் உலக ஜூனியர் சாம்பியனான 19 வயது இந்திய வீராங்கனை சாக்‌ஷி சவுத்ரி 0-5 என்ற கணக்கில் தென்கொரியாவின் இம் ஏஜியிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். அடுத்து அவர் மே மாதம் நடைபெறும் உலக தகுதி சுற்று போட்டியில் பங்கேற்று தகுதி காண இன்னொரு வாய்ப்பு உள்ளது.

முந்தைய நாளில் நடந்த 75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் 5-0 என்ற கணக்கில் இந்தோனேஷியா வீரர் மைக்கேல் ரோபெட்ர் முஸ்கிதாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்ததுடன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி கண்டார். 91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் கால் இறுதியில் இந்திய வீரர் சதீஷ்குமார் 5-0 என்ற கணக்கில் மங்கோலியா வீரர் டாவ்லி ஒட்கான்பயரை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியதுடன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். வெற்றிக்கு பிறகு சதீஷ் குமார் கருத்து தெரிவிக்கையில், ‘முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறேன். எனது மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை’ என்றார்.

Next Story