ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: சிந்து, சாய்னா ஜொலிப்பார்களா?


ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: சிந்து, சாய்னா ஜொலிப்பார்களா?
x
தினத்தந்தி 11 March 2020 12:16 AM GMT (Updated: 11 March 2020 12:16 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சத்துக்கு இடையே ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திரங்கள் சிந்து, சாய்னா ஜொலிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பர்மிங்காம்,

நூற்றாண்டு கால பழமைவாய்ந்த ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்டுதோறும் இங்கிலாந்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான போட்டி பர்மிங்காம் நகரில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.

பேட்மிண்டனில் மிகவும் உயரிய, கவுரவமிக்கதாக கருதப்படும் இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியே 14 லட்சம் ஆகும். வாகை சூடும் வீரர், வீராங்கனை தலா ரூ.57 லட்சத்தை பரிசாக பெறுவார்கள். அத்துடன் வெற்றியாளருக்கு 12 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு 10,200 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றாக அமைந்துள்ள வகையிலும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏப்ரல் 28-ந்தேதி நிலவரப்படி சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் டாப் 16 இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்திய தரப்பில் இப்போதைக்கு தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து மட்டுமே ஒலிம்பிக்கில் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது. மற்ற இந்தியர்கள் தங்களது தரவரிசையை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

சமீப காலமாக தடுமாறி வரும் உலக சாம்பியனான பி.வி.சிந்து இந்த போட்டியில் சாதித்து பழைய நிலைக்கு திரும்பும் உத்வேகத்துடன் உள்ளார். அவர் முதலாவது சுற்றில் 14-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பீவென் ஜாங்கை எதிர்கொள்கிறார். இதற்கு முன்பு ஜாங்கை 9 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள சிந்து அதில் 5-ல் வெற்றி கண்டிருக்கிறார்.

தரவரிசையில் 20-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு முதல் சுற்றே கடினமானதாக அமைந்துள்ளது. அவர் முன்னாள் நம்பர் ஒன் மங்கை அகானே யமாகுச்சியை (ஜப்பான்) சந்திக்கிறார். யமாகுச்சிக்கு எதிராக இதுவரை 10 முறை மோதியிருக்கும் சாய்னா, அதில் 2-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் கண்டுள்ளார். ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்), நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான சென் யூ பே (சீனா), நஜோமி ஒகுஹரா (ஜப்பான்), தாய் ஜூ யிங் (சீனதைபே), ராட்சனோக் இன்டானோன் (தாய்லாந்து) ஆகியோரும் வரிந்து கட்டுவதால் பெண்கள் பிரிவில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆண்கள் பிரிவில் சூப்பர் பார்மில் உள்ள நடப்பு சாம்பியன், உலக சாம்பியன் மற்றும் நம்பர் ஒன் வீரரான ஜப்பானின் கென்டோ மோமோட்டா பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்துக்கு முதல் சுற்றை தாண்டுவதே யுத்தம் போல் இருக்கும். அவர் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்குடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

ஒலிம்பிக் வாய்ப்பை வெகுவாக நெருங்கி விட்ட தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரரான சாய் பிரனீத் முதல் சவாலை ஜாவ் ஜன் பெங்குடன் (சீனா) தொடங்குகிறார். முன்னாள் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான காஷ்யப்(இந்தியா), இந்தோனேஷிய வீரர் ஷிசர் ஹிரென் ருஸ்டாவிடோவுடனும், இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், லீ சேக் யுவுடனும் (ஹாங்காங்) மோதுகிறார்கள்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்திய வீரர்கள் பிரனாய், சிராக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சமீர் வர்மா, சவுரப் வர்மா ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு இந்த போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியர்களில் இதுவரை பிரகாஷ் படுகோனே (1980-ம் ஆண்டு), கோபிசந்த் (2001-ம் ஆண்டு) ஆகியோர் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். இந்த நீண்ட கால ஏக்கத்தை சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் உள்ளிட்டோரில் யாராவது தணிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story