ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிபோகுமா?


ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிபோகுமா?
x
தினத்தந்தி 11 March 2020 11:21 PM GMT (Updated: 11 March 2020 11:21 PM GMT)

ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிபோகுமா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.


ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியால் இந்த போட்டி நடக்குமா? நடக்காதா? என்று ஒரு பக்கம் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான கேள்விக்கு போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி போர்டுவின் உறுப்பினர் ஹருயுகி தகஹாஷி கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டி ரத்தாகும் என்று நான் கருதவில்லை. அது ஒத்திவைக்கப்படலாம். போட்டியை ரத்து செய்தால் அது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். அமெரிக்கா டி.வி. ஒளிபரப்பு நிறுவனம் மட்டும் பெரிய தொகையை வழங்கியிருக்கிறது. ஒன்று அல்லது 2 ஆண்டு வரை தள்ளிபோவதற்கு வாய்ப்புள்ளது’ என்றார்.

‘ஷாட்பிட்ச்’ பந்துகளை சமாளிப்பதில் நாங்கள் மோசமானவர்கள் அல்ல - ரஹானே

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஷாட்பிட்ச் பந்துவீச்சு குறித்து மக்கள் அதிகமாக பேசுகிறார்கள். நியூசிலாந்து தொடரில் நாங்கள் ஷாட்பிட்ச் பந்து வீச்சில் தடுமாறினோம். ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக ஷாட்பிட்ச் பந்தை எதிர்கொள்வதில் மோசமான வீரர் என்று அர்த்தம் கிடையாது. மெல்போர்னில் நடந்த இன்னிங்சை (2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) பாருங்கள். அதில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். ஷாட்பிட்ச் பந்துகளில் நன்றாக ஆடினோம். குறிப்பாக நான் அதிரடியாக விளையாடினேன். எனவே ஷாட்பிட்ச் பந்துவீச்சு குறித்து ரொம்ப அதிகமாக சிந்திக்க வேண்டியதில்லை. நியூசிலாந்தில் ஆடும் போது காற்றின் தாக்கம் நிறைய இருந்தது. அத்தகைய சூழலை கச்சிதமாக பயன்படுத்தி நியூசிலாந்து பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர். இந்த தொடரில் இருந்து ஒரு அணியாக நிறைய கற்றுக்கொண்டோம். நாங்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன், நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டியது முக்கியம். ஆண்டின் இறுதியில் நடக்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார்.

உலக லெவன்-ஆசிய லெவன் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

வங்காளதேச நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், அந்த நாட்டின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரகுமானின் 100-வது பிறந்த நாளையொட்டி உலக லெவன்- ஆசியா லெவன் அணிகள் இடையே இரண்டு சர்வதேச 20 ஓவர் போட்டிகளை மார்ச் 21, 21-ந்தேதிகளில் டாக்காவில் நடத்த வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து வந்தது. ஆசிய லெவன் அணிக்கு 4-5 வீரர்களை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. விராட் கோலி ஒரு ஆட்டத்தில் ஆட சம்மதம் தெரிவித்து இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி மறுஅறிவிப்பு வரும் வரை தள்ளிவைக்கப்படுவதாக வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் நேற்று அறிவித்தார்.

ரசிகர்கள் இன்றி நடக்கப்போகும் பேட்மிண்டன் போட்டி

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாகவும் அரங்கேறும் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பேட்மிண்டன் சங்கம் மற்றும் உலக பேட்மிண்டன் சம்மேளனம் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் திட்டமிட்டபடி நடைபெறும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த முறை போட்டியை நேரில் காண ரசிகர்களை அனுமதிப்பது இல்லை என்று முடிவு செய்து இருக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story