சென்னையில் இன்று நடைபெறும் இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு


சென்னையில் இன்று நடைபெறும் இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 March 2020 12:00 AM GMT (Updated: 15 March 2020 12:00 AM GMT)

சென்னையில் இன்று நடைபெறும் இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கு தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்திய கைப்பந்து சம்மேளனத்துக்கு 2020-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கடந்த ஜனவரி 31-ந் தேதி உத்தரவிட்டது. இதன்படி, இந்த சம்மேளனத்துக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக அலகாபாத் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ஏ.சிங் நியமிக்கப்பட்டார். பின்னர் மார்ச் 15-ந்தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்தலுக்கு முன்பாகவே இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அனில் அகர்வாலும், இணை செயலாளர் பதவிக்கு நானும் (மார்ட்டின் சுதாகரும்) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டோம். இந்த சூழ்நிலையில், இந்த தேர்தலுக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் கோவா கைப்பந்து சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 11-ந் தேதி உத்தரவிட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் வழங்கியுள்ள தீர்ப்புகளில், ‘தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டால், அந்த தேர்தலை நிறுத்தும் விதமாக இடைக்கால தடை எதையும் நீதிமன்றங்கள் விதிக்க முடியாது’ என்று கூறியுள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் தங்கசிவமும், கோவா கைப்பந்து சங்கத்தின் சார்பில் வக்கீல் மதன்பாபும், இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் சார்பில் வக்கீல் பி.வி.பாலசுப்பிரமணியனும் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘இந்த வழக்கின் சூழ்நிலை கருதி, தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கிறோம். இந்திய கைப்பந்து சம்மேளனத்துக்கு மார்ச் 15-ந் தேதி (இன்று) தேர்தல் நடத்தலாம். ஆனால், தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தனி நீதிபதி விதித்த தடை நீக்கப்பட்டுள்ளதால், இந்த தேர்தல் சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடைபெறுகிறது.


Next Story