கொரோனா அச்சம்: இந்திய ஒலிம்பிக் சங்க குழுவின் டோக்கியோ பயணம் தள்ளிவைப்பு


கொரோனா அச்சம்: இந்திய ஒலிம்பிக் சங்க குழுவின் டோக்கியோ பயணம் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 16 March 2020 12:14 AM GMT (Updated: 16 March 2020 12:14 AM GMT)

கொரோனா அச்சம் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்க குழுவினர் டோக்கியோ பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி விட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கி விட்டதால், கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விளையாட்டு உலகமும் கொரோனாவினால் சீர்குலைந்து போய் கிடக்கிறது. அடுத்த சில வாரங்களுக்கு சர்வதேச போட்டிகள் எதுவும் கிடையாது. விளையாட்டு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகள் ரத்து, தள்ளிவைப்பு தொடர் கதையாகிறது. இதனால் விளையாட்டு ரசிகர்கள் தங்களது பொழுது போக்கு இனி என்ன? என்று ஒரு பக்கம் சமூக வலைத்தளத்தில் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ரத்தான சில விளையாட்டு நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

* ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் ஏற்பாடு மற்றும் அங்கு இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தங்குமிடம், உணவு முறைகள், பாதுகாப்பு உள்ளிட்ட வசதி வாய்ப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, இந்திய ஒலிம்பிக் சங்க முன்னணி நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகிற 25-ந்தேதி டோக்கியோ செல்ல இருந்தனர். தற்போது இந்த பயணம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. மாற்று தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்று கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

*தென் இந்திய ரேலி கார்பந்தயம் வருகிற 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டையில் நடக்க இருந்தது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்த போட்டி ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் அறிவித்துள்ளது.

*ஜார்கண்டில் வருகிற 27-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடக்க இருந்த மாநில அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

*எகிப்து நாட்டில் அடுத்த 15 நாட்களுக்கு உள்நாட்டில் நடக்கும் அனைத்து கால்பந்து போட்டிகளையும் ரத்து செய்வது என்று எகிப்து கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

*ஆஸ்திரேலியாவில் பிரதான முதல்தர கிரிக்கெட் போட்டியான ஷெப்பீல்டு கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2-வது உலகப் போருக்கு பிறகு இந்த போட்டி தற்போது தான் ரத்தாகியிருக்கிறது.

* வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், உள்நாட்டில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஷிப்பின் முதல் 2 சுற்று, பெண்களுக்கான சூப்பர் 50 ஓவர் கோப்பை, ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகியவையும் இதில் அடங்கும்.


Next Story