பிற விளையாட்டு

கொரோனா காரணமாக விளையாட்டு போட்டிகள் தற்காலிகமாக தள்ளிவைப்பு - துளிகள் + "||" + Because of the corona Game Matches Postponement of temp in sports tips

கொரோனா காரணமாக விளையாட்டு போட்டிகள் தற்காலிகமாக தள்ளிவைப்பு - துளிகள்

கொரோனா காரணமாக விளையாட்டு போட்டிகள் தற்காலிகமாக தள்ளிவைப்பு - துளிகள்
* மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டர் பதிவில், ‘கொரோனா காரணமாக விளையாட்டு போட்டிகள் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனாலும் வீரர்கள் உத்வேகத்தை இழக்காமல் தங்கள் பயிற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* கோவாவில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டிக்கு சென்ற சென்னையின் எப்.சி. அணியின் சமூக ஊடக அதிகாரபூர்வ போட்டோகிராபர் தனது பேக்கில் வைத்து 24 கிராம் கஞ்சாவை எடுத்து சென்றதாக கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


* ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீசில் ஏற்றப்பட்ட ஓலிம்பிக் தீபம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தும் அமைப்பாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி ஏதென்சில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* மும்பையில் இயங்கி வரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அலுவலகம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து தங்கள் பணிகளை கவனிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேசிய கிரிக்கெட் அகாடமியின் பல்வேறு பயிற்சி முகாம்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் பயிற்சி முகாமும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

* கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தென்ஆப்பிரிக்காவில் அடுத்த 2 மாதத்துக்கு நடைபெற இருந்த அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் தள்ளி வைப்பதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

* ஜெர்மனியில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்க சென்று இருந்த 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நேற்று இந்தியா திரும்ப திட்டமிட்டு இருந்தார். கொரோனாவினால் விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் காரணமாக அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிராங்பர்ட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டு தங்கி இருப்பதாக அவரது மனைவி அருணா தெரிவித்துள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான சென்னையை சேர்ந்த ஆர்.அஸ்வின் தனது டுவிட்டர் பதிவில், ‘கொரோனா முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை சென்னை மக்கள் இன்னும் கவனத்தில் கொள்ளவில்லை. சென்னையில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என்று மக்கள் நினைத்து இருக்கலாம். அல்லது தங்களை எதுவும் தாக்காது என்று நம்பிக்கை கொண்டு இருக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை