ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பதே நல்லது கோபிசந்த் சொல்கிறார்


ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பதே நல்லது   கோபிசந்த் சொல்கிறார்
x
தினத்தந்தி 19 March 2020 11:23 PM GMT (Updated: 19 March 2020 11:23 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பதே நல்லதாகும் என்று இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்கிறது. உலகையே ஸ்தம்பிக்க வைத்து இருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தபோட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

இருப்பினும் இந்த போட்டியை குறித்த தேதியில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலும், போட்டி அமைப்பாளர்களும் முனைப்பு காட்டி வருகிறார்கள். அதேநேரத்தில் ஒலிம்பிக் போட்டியை தள்ளிப்போட வேண்டும் என்ற குரலும் ஒருபுறம் ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கிறது.

கோபிசந்த் கருத்து

இந்த நிலையில் இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. அந்த போட்டிக்கு இன்னும் அதிக நாட்கள் இல்லை. எனவே அதற்கு தகுந்தபடி தயாராக வேண்டிய நேரம் வந்து விட்டது. இதனால் எல்லோரும் நிம்மதி அடையும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் முடிவு எடுக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் சுகாதாரம் பயமுறுத்தும் வகையில் இருப்பதாக நான் நினைக்கிறேன். பல நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இது ஒரு கடினமான தருணமாகும். இந்த நேரத்தில் ஒட்டு மொத்த உலகமே தங்கள் நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகம் சிந்தித்து கொண்டு இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பதே நல்லது என்று நான் கருதுகிறேன்.

தவறான முடிவு

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியை நடத்த உலக பேட்மிண்டன் சம்மேளனம் எடுத்த முடிவு தவறானதாகும். ஒலிம்பிக் தகுதி சுற்று பேட்மிண்டன் போட்டிகள் தள்ளிபோடப்பட்டது எதிர்பாராமல் நடந்த விஷயமாகும். எந்தவொரு முடிவையும் அதன் சாதக பாதகங்களை பார்த்து எடுக்க வேண்டும். எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான முடிவை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். எல்லோரையும் நம்மால் திருப்திபடுத்த முடியாது. அதேநேரத்தில் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் முடிவு எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கோபிசந்த் கூறினார்.

Next Story