டோக்கியோ ஒலிம்பிக் தலைவிதி குறித்து இப்போதே முடிவு எடுக்க அவசியமில்லை - அமெரிக்கா ஒலிம்பிக் கமிட்டி


டோக்கியோ ஒலிம்பிக் தலைவிதி குறித்து இப்போதே முடிவு எடுக்க அவசியமில்லை - அமெரிக்கா ஒலிம்பிக் கமிட்டி
x
தினத்தந்தி 22 March 2020 12:26 AM GMT (Updated: 22 March 2020 12:26 AM GMT)

ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் அதன் தலைவிதி குறித்து இப்போதே முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்கா ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. உலகையே புரட்டிபோட்டு விட்ட கொரோனா வைரஸ் தொற்று, ஒலிம்பிக் போட்டியையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் ஒலிம்பிக் போட்டி நடக்குமா? நடக்காதா? என்பதில் நிச்சயமற்ற ஒரு சூழலே நிலவுகிறது. ஓரிரு மாதங்களில் நிலைமை சரியாகி விட்டால் ஒலிம்பிக் போட்டியை நடத்தி விடலாம் என்று போட்டி அமைப்பாளர்கள் நம்புகிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்க நீச்சல் சங்கம் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. ஒலிம்பிக்கில் அமெரிக்கா அதிக பதக்கங்களை அறுவடை செய்யும் விளையாட்டுகளில் நீச்சல் பிரிவு உள்ளது. 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் நீச்சலில் 33 பதக்கங் களை குவித்தனர்.

அமெரிக்க நீச்சல் சங்கத்தின் தலைமை நிர்வாகி டிம் ஹின்செய், ‘கொரோனா அச்சம் மற்றும் கட்டுப்பாடுகளால் அமெரிக்க நீச்சல் வீரர், வீராங்கனைகளின் பயிற்சி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் நலன் கருதி ஒலிம்பிக்கை தள்ளிவைக்க குரல் கொடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி அமெரிக்கா ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆனால் நீச்சல் சங்கத்தின் கோரிக்கையை ஏற்க அமெரிக்கா ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் கமிட்டி மறுத்து விட்டது. இதன் தலைவர் சுசானே லயன்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘டோக்கியோ ஒலிம்பிக்கை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது தள்ளிவைப்பதா? என்பது குறித்து அவசரப்பட்டு இப்போதே முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் ஒலிம்பிக் அடுத்த வாரமோ அல்லது 2 வாரங்களிலேயோ தொடங்கவில்லை. இன்னும் 4 மாதங்கள் முழுமையாக இருக்கிறது.

முடிவு எடுப்பதற்கு முன்பாக நிபுணர்களிடம் இருந்து ஆலோசனைகளையும், தகவல்களையும் பெற வேண்டி உள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி) கூறியிருக்கிறது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்’ என்றார்.

இதற்கிடையே நார்வே ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச்சுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத வரை ஒலிம்பிக் போட்டியை டோக்கியோவில் நடத்தக்கூடாது. அதுவரை காத்திருக்க வேண்டும். ஏனெனில் வீரர்கள் மற்றும் மக்களின் உடல் நலனே முக்கியம். இது நமக்கு சவாலான காலக்கட்டம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் பிரான்ஸ் நீச்சல் சம்மேளனமும் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


Next Story