அரசின் அறிவுரைகளை முறையாக பின்பற்றுங்கள் - கவுதம் கம்பீர் எச்சரிக்கை


அரசின் அறிவுரைகளை முறையாக பின்பற்றுங்கள் - கவுதம் கம்பீர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 March 2020 11:54 PM GMT (Updated: 23 March 2020 11:54 PM GMT)

கொரோனா வைரஸ் தொடர்பான அரசின் அறிவுரைகளை முறையாக பின்பற்றுங்கள் என்று கவுதம் கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


* துபாயில் செயல்பட்டு வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்களது உறுப்பு நாடுகளுடனான ஆலோசனை கூட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தவும் முடிவு செய்துள்ளது.

* கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.99 லட்சம் நிவாரண நிதியாக இலங்கை அரசுக்கு உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாதவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘உங்களை குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். இல்லையெனில் நீங்கள் ஜெயிலுக்கு செல்ல வேண்டியது இருக்கும். சமூகத்துக்கு அச்சுறுத்தலாக விளங்காதீர்கள். நம்முடைய வாழ்க்கைக்காக நாம் போராடுகிறோம். நம்முடைய வாழ்வாதாரத்துக்காக அல்ல. அரசின் அறிவுரைகளை முறையாக பின்பற்றுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மல்யுத்த நட்சத்திர வீரரான 25 வயது பஜ்ரங் பூனியா நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் எனது 6 மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நாம் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகிறோம். இந்த நிலை இன்னும் 2 முதல் 3 மாதங்கள் வரை நீடித்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பதே சரியானதாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். பஜ்ரங் பூனியா இந்தியன் ரெயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நிவாரண நிதிக்கு சம்பளத்தை வழங்க முன்வந்து இருக்கும் பஜ்ரங் பூனியாவை, மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ டுவிட்டர் மூலம் பாராட்டி இருக்கிறார்.


Next Story