‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன்’ - இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் நம்பிக்கை


‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன்’ - இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் நம்பிக்கை
x
தினத்தந்தி 31 March 2020 12:45 AM GMT (Updated: 31 March 2020 12:45 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்று இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதுடெல்லி, 

2016-ம் ஆண்டில் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், உடல் திறனை அதிகம் சோதிக் கக்கூடிய ஜிம்னாஸ்டிக்ஸ் பந்தயத்தில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் நூலிழையில் பதக்க வாய்ப்பை கோட்டை விட்டதுடன், 4-வது இடம் பிடித்து அனைவரையும் வியக்க வைத்தார். திரிபுராவை சேர்ந்த 26 வயதான தீபா கர்மாகர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஒரே இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு காயம் காரணமாக கடும் அவதிகளை சந்தித்த அவர் காயத்தை குணப்படுத்த கடந்த 2017-ம் ஆண்டில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சை முடிந்து அடுத்த ஆண்டு (2018) களம் திரும்பிய தீபா கர்மாகருக்கு காலில் மீண்டும் வலி ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டில் (2019) பாகு மற்றும் தோகாவில் நடந்த உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி மற்றும் அக்டோபரில் நடைபெற்ற உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனால் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியானது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு (2021) தள்ளிவைப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஒலிம்பிக் போட்டிக்கான பல்வேறு தகுதி சுற்று போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால் கிடைத்து இருக்கும் கால அவகாசத்தை பயன்படுத்தி தன்னால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்று இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் நட்சத்திரம் தீபா கர்மாகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தகுதிக்கான 8 உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. இந்த மாதத்தில் (மார்ச்) நடக்க இருந்த இந்த போட்டிகள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வருகிற ஜூலை மாதத்துக்கு தள்ளி போடப்பட்டுள்ளது. தற்போதைய சூழ் நிலையை பார்க்கையில் இந்த தகுதி போட்டிகள் அடுத்த ஆண்டு தான் நடக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் காயத்தில் இருந்து விடுபட்டு இந்த போட்டிகளுக்கு தயாராக எனக்கு கூடுதல் நேரம் கிடைக்கும்.

எனது பழைய சிறந்த பார்முக்கு திரும்ப கடுமையாக முயற்சி செய்வேன். சிறப்பாக செயல்பட்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்று நம்புகிறேன். தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரசின் தாக்கத்தை முறியடிக்க வேண்டியது தான் முக்கியமானதாகும். அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பதுடன், சுகாதாரத்தை கடைபிடியுங்கள் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன். கைகளை அடிக்கடி கழுவுங்கள். ஊரடங்கு உத்தரவை முழுமையாக பின்பற்றுங்கள். அதனை சரியாக செய்தால் நம்மால் இந்த போராட்டத்தில் வெற்றி பெற முடியும்’. இவ்வாறு தீபா கர்மாகர் கூறினார்.

தீபா கர்மாகரின் நீண்ட நாள் பயிற்சியாளர் பிஸ்வேஷ்வர் நந்தி கருத்து தெரிவிக்கையில், ‘காயத்தில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ள தீபா கர்மாகர் இப்போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். ஜிம்னாஸ்டிக்சை பொறுத்தவரையில் பயிற்சி முறைகளை மெதுவாக தான் தொடங்க முடியும். தீபா தனது அடிப்படை பயிற்சிகளை கடந்த மாதம் இறுதியில் ஆரம்பித்து விட்டார். இன்னும் 2 முதல் 3 மாதங்களுக்குள் அவர் சிறந்த நிலைக்கு திரும்பி விடுவார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற இன்னும் 2 போட்டிகள் தான் மீதமிருக்கிறது. ஜிம்னாஸ்டிக்ஸ் பந்தயத்தை பொறுத்தமட்டில் அதிக காயங்கள் ஏற்படத் தான் செய்யும். இதனை அவர் ஒரு சவாலாக எடுத்து கொள்வார் என்று நான் நம்புகிறேன். வரும் தகுதி போட்டிகளில் அவர் 2 வெள்ளிப்பதக்கம் அல்லது ஒரு தங்கப்பதக்கம் வென்றால் போதுமானதாகும். அவரால் அதனை சாதித்து காட்ட முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Next Story