விளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி - கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தும்படி வேண்டுகோள்


விளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி - கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தும்படி வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 April 2020 12:05 AM GMT (Updated: 4 April 2020 12:05 AM GMT)

தெண்டுல்கர், கங்குலி, டோனி, விராட்கோலி, விஸ்வநாதன் ஆனந்த், பி.வி.சிந்து உள்பட 40-க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

புதுடெல்லி, 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நமது நாட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக வருகிற 14-ந் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் தங்களை, தாங்களே தனிமைப் படுத்தி கொள்வதுடன், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்றும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி இருக்கின்றன. அரசின் இந்த அறிவுரையை அனைத்து தரப்பினரும் பின்பற்றி கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று விளையாட்டு பிரபலங்கள் உள்பட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று வீடியோகான்பரன்ஸ் மூலம் இந்தியாவை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சச்சின் தெண்டுல்கர், கங்குலி, டோனி, விராட்கோலி, ரோகித் சர்மா, ஷேவாக், யுவராஜ் சிங் (அனைவரும் கிரிக்கெட்) , விஸ்வநாதன் ஆனந்த் (செஸ்), பி.டி.உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ், ஹிமாதாஸ் (தடகளம்), யோகேஷ்வர் தத், பஜ்ரங் பூனியா (மல்யுத்தம்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), மேரிகோம் (குத்துச்சண்டை), ராணி ராம்பால் (ஆக்கி), தீபிகா குமாரி (வில்வித்தை), சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), ரோகன் போபண்ணா (டென்னிஸ்) உள்பட 40-க்கும் அதிகமான விளையாட்டு பிரபலங்கள் மற்றும் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ ஆகியோர் பங்கேற்றனர்.

விளையாட்டு பிரபலங்களுடன் முதல்முறையாக மோடி நடத்திய இந்த வீடியோகான்பரன்சில் பங்கேற்றவர்களில் பலர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஆலோசனைகளையும், கருத்துகளையும் பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் பேசிய மோடி, ‘கொரோனா தடுப்பு விழ்ப்புணர்வு பிரசாரத்தில் விளையாட்டு உலகினர் அளித்து வரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் எல்லா தரப்பினரிடமும் ஆழமாக சென்றடையும் வகையில் மேலும் இதனை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று செயல்பட தயார் என்று விளையாட்டு பிரபலங்கள் உறுதி அளித்தனர்.

பிரதமருடன் பேசியது குறித்து தெண்டுல்கர் கருத்து தெரிவிக்கையில், ‘நான் நம்புவது போலவே ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் அஜாக்கிரதையாக இருக்காமல் மேலும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று பிரதமரும் சுட்டிக்காட்டினார். ஊரடங்கிற்கு பிந்தைய காலத்தை நாம் எப்படி கையாள்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா பிரச்சினையில் இருந்து விடுபட்ட பிறகும் வாழ்த்து தெரிவிப்பதற்கு நம்மால் முடிந்த அளவுக்கு கை குலுக்குதலை தவிர்த்து கைகூப்பி நமஸ்தே (வணக்கம்) தெரிவிக்கும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் கூறினேன்’ என்றார்.

கலந்துரையாடலுக்கு பிறகு இந்திய தடகள வீராங்கனை ஹிமாதாஸ் அளித்த பேட்டியில், ‘எங்களுடன் பிரதமர் கலந்துரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊரடங்கை மதிக்காத சிலர் டாக்டர்களை தாக்கும் காட்சிகளை பார்க்கையில் வேதனை அளித்தது என பிரதமரிடம் தெரிவித்தேன்’ என்று கூறினார்.

Next Story