பிற விளையாட்டு

‘தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் சுயாட்சி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ - மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து + "||" + The autonomy of national sports federations must be protected - Federal Sports Department Minister Kiran Rijiju comments

‘தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் சுயாட்சி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ - மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து

‘தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் சுயாட்சி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ - மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து
தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் சுயாட்சி உரிமை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் செயல்பாடுகளில், மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அதிகாரிகள் தலையிட்டு தங்களின் உரிமையை பறிக்க முயலுகிறார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா சமீபத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.


இதற்கு பதிலளித்த மத்திய விளையாட்டு துறை செயலாளர் ராதேஷியாம் ஜூலானியா, ‘தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு அரசு அளித்து வரும் உதவிகளை விட்டு விட்டு, அதன் பிறகு விளையாட்டு அமைச்சகத்தின் தலையீடு குறித்து புகார் அளிக்க தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் முன்வர வேண்டும்’ என்று காட்டமாக தெரிவித்து இருந்தார். இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகம் இடையிலான சுமுக உறவில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

பங்குதாரர்கள் இடையே பல்வேறு மட்டத்திலான வழக்கமான ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்கள் சுமுகமானதாக இருக்க வேண்டும். ஆனால் எந்தவொரு சூழ்நிலையிலும் தனிநபர்களின் விரும்பத்தகாத செயல்பாடுகள் நம்முடைய ஒத்துழைப்பு மற்றும் உத்வேகத்தை குலைக்க கூடியதாக இருக்கக்கூடாது. சில சூழ்நிலையில் தனிநபர்கள் தெரிவிக்கும் எந்தவொரு கருத்தையும் கொள்கை விஷயமாக கருத்தில் எடுத்து கொள்ளக்கூடாது. இந்தியாவை விளையாட்டில் சூப்பர் பவர் நாடாக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க வேண்டும் என்ற முடிவுடன் நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் செயல்பாட்டில் தலையிட வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் சுயாட்சியுடன் செயல்படுவதை எந்த விலை கொடுத்தும் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தேசிய விளையாட்டு கொள்கை மற்றும் நல்ல நிர்வாகத்தை தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் பின்பற்ற வேண்டும் என்பது அதன் அனைத்து செயல்களிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை கொண்டு வருவதற்கான மூலைக்கல்லாகும்.

விளையாட்டு மேம்பாட்டுக்காக, தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு தேவையான ஆதரவை அளிக்க அரசு உறுதியாக இருக்கிறது. அதேநேரத்தில் விளையாட்டு வீரர்களின் நலனை பாதுகாப்பதிலும் ஆர்வமாக இருக்கிறோம். இந்த விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். நமது வீரர்களுக்கு சிறந்த பயிற்சி, நல்ல ஊட்டச்சத்து உணவு வகைகள் அளிப்பதுடன், உயர்தர போட்டியில் பங்கேற்க வைத்து, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் டாப்-10 இடங்களுக்குள் நமது நாட்டை கொண்டு வருவது தான் விளையாட்டு மந்திரி என்ற முறையில் எனது இலக்காகும். இந்த பொதுவான இலக்கை எட்ட மத்திய விளையாட்டு அமைச்சகம், சாய், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இந்த விஷயத்தில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட அரசு உறுதியாக இருக்கிறது’ என்று அவர் கூறினார்.