‘சாய்’ மையத்தில் மீண்டும் பயிற்சி: 6 பேர் கொண்ட கமிட்டி அமைப்பு


‘சாய்’ மையத்தில் மீண்டும் பயிற்சி: 6 பேர் கொண்ட கமிட்டி அமைப்பு
x
தினத்தந்தி 10 May 2020 11:30 PM GMT (Updated: 10 May 2020 8:24 PM GMT)

பாதுகாப்பு நடைமுறைகளை தயார்செய்து அதன் மூலம் ‘சாய்’ மையங்களில் மீண்டும் பயிற்சியை தொடங்குவது குறித்து 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரசின் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்திற்குட்பட்ட (‘சாய்’) பயிற்சி மையங்களில் நடந்து வந்த அனைத்து பயிற்சியும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்களும், ஒலிம்பிக் தகுதி சுற்றுக்காக தங்களை தயார்படுத்தி வந்த வீரர், வீராங்கனைகளும் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்கள் உரிய பயிற்சி இன்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்ந்ததும் படிப்படியாக ‘சாய்’ மையங்களில் மீண்டும் பயிற்சியை தொடங்க மத்திய விளையாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது. ‘சாய்’ பயிற்சி மையத்தை திறக்கும் போது கொரோனா பரவுவதை தடுப்பதற்கு எத்தகைய உயர்மட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை அறிந்து செயல்படுத்துவதற்கு வசதியாக ‘சாய்’ சார்பில் 6 பேர் கொண்ட கமிட்டி நேற்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் தலைவராக ‘சாய்’ செயலாளர் ரோஹித் பரத்வாஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் பயிற்சி தொடங்கும் போது வீரர்கள், பயிற்சியாளர்கள், உடல்தகுதி நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், அலுவலக நிர்வாகிகள், உணவகம் மற்றும் விடுதி உதவியாளர்கள், பார்வையாளர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு விஷயத்தில் எத்தகையை கட்டுப்பாடுகளை விதித்து அதை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது குறித்தும், மையத்தின் பொது இடங்களில் மேற்கொள்ளப்படும் முன்எச்சரிக்கை நடவடிக்கை, கிருமி நாசினி பயன்பாடு, மருத்துவ வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை குறித்தும் இந்த கமிட்டி கலந்து ஆலோசித்து வரைவு அறிக்கை தயாரிக்க உள்ளது.

இதே போல் ஒவ்வொரு தேசிய விளையாட்டு அமைப்புகளிடமும் ஆலோசிக்க இருக்கிறார்கள். அவர்களின் கருத்துகளையும் கேட்டு அறிந்து இறுதியாக திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார்கள்.

இதற்கிடையே மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அளித்த ஒரு பேட்டியில், “சாய்’ மையங்களில் மீண்டும் பயிற்சியை தொடங்குவதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். ஆனால் முன்னணி வீரர், வீராங்கனை யாருக்காவது விபரீதம் நிகழ்ந்தால் அது மிகப்பெரிய பின்னடைவாகி விடும். அதனால் மீண்டும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விவகாரத்தை கவனமாக கையாள்கிறோம்.

இதனால் தான் இந்த நாள் வரைக்கும் எங்களது வீரர்கள் யாருக்கும் எந்த வித தொற்றும் இல்லை. வீரர்கள் நமது நாட்டின் கவுரவம். அதனால் நாங்கள் எந்த ரிஸ்க்கும் எடுக்கமாட்டோம். ஊரடங்கு முடிந்ததும் குறிப்பிட்ட ‘சாய்’ பயிற்சி மையங்களை திறப்பதற்காக மருத்துவ நிபுணர்கள், தொழில்நுட்ப கமிட்டியினருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்’ என்றார்.

மற்ற விளையாட்டுகளுக்கு உதவி - கிரண் ரிஜிஜூ

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அளித்த மற்றொரு பேட்டியில், ‘கொரோனா தாக்கத்தால் விளையாட்டு மட்டுமல்ல, வாழ்க்கை முறையும் மாறி விட்டது. முன்பு போல் நாம் இனி வாழ முடியாது. பாதுகாப்பு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை நாம் பின்பற்றியாக வேண்டும். அது மட்டுமின்றி ரசிகர்கள் இல்லாமலும் போட்டியை சுவாரஸ்யமாக்குதற்கு திட்டமிட வேண்டும். எதிர்காலத்தில் ஸ்டேடியங்கள் ரசிகர்களால் முழுமையாக நிரம்பாது. ஐ.பி.எல். கிரிக்கெட் பணம்கொழிக்கும் விளையாட்டு. டெலிவிஷன் ஒளிபரப்பு மூலமே நிறைய வருமானம் பார்த்து விடுவார்கள். ஆனால் இங்குள்ள மற்ற விளையாட்டுகளுக்கு உதவி தேவை. அத்தகைய விளையாட்டு மற்றும் அதன் அமைப்புகளுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம். உலக அளவில் பதக்கங்களை வென்று குவிக்கும் நாடுகளின் பட்டியலில் டாப்-10 இடத்தை இந்தியா பிடிக்க வேண்டும் என்பதே எங்களது லட்சியம்’ என்றார்

Next Story