‘விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்க காலதாமதமாகும்’ - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தகவல்


‘விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்க காலதாமதமாகும்’ - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தகவல்
x
தினத்தந்தி 24 May 2020 12:18 AM GMT (Updated: 24 May 2020 12:18 AM GMT)

இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்க காலதாமதமாகும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஒவ்வொரு நாடுகளும் மீண்டும் விளையாட்டு போட்டிகளை தொடங்குவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவில் ஊரடங்கு விதிமுறையில் சற்று தளர்வு செய்யப்பட்டு இருப்பதால் வீரர், வீராங்கனைகள் மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி உரிய பாதுகாப்புடன் வெளிப்புற மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடலாம் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இருப்பினும் அச்சம் காரணமாக மீண்டும் பயிற்சியை தொடங்க முன்னணி வீரர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

நமது நாட்டில் விளையாட்டு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் அதற்கு முன்பு நாம் பயிற்சியை ஆரம்பிப்பது குறித்து சிந்திக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக நாம் எந்தவொரு போட்டிக்கும் போகப்போவதில்லை. பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகளை நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த புதிய நிலைமைக்கு தகுந்தபடி வாழ நாம் பழகி கொள்ள வேண்டும்.

ஐ.பி.எல். உள்பட எந்தவொரு போட்டியாக இருந்தாலும் நமது நாட்டில் நடைபெறுவது குறித்து சூழ்நிலைக்கு தக்கபடி அரசு தான் முடிவு செய்யும். விளையாட்டு போட்டியை நடத்த வேண்டும் என்பதற்காக உடல் ஆரோக்கியத்தில் ‘ரிஸ்க்’ எடுக்க முடியாது. தற்போது கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தான் நமது கவனம் உள்ளது. அதேநேரத்தில் சகஜ நிலை திரும்புவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். நமது நாட்டில் விளையாட்டு போட்டிகள் மீண்டும் எப்போது நடைபெறும் என்று தேதி குறிப்பிட்டு சொல்வது கடினம். போட்டி தொடங்க காலதாமதமாகும். ஆனால் இந்த ஆண்டில் நிச்சயம் சில வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.
இந்தியாவுக்காக போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரர்களின் உடல் தகுதி உள்ளிட்ட முழுவிவரங்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். வீரர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் அறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதனை பின்பற்றி பயிற்சியை தொடங்கலாம். விளையாட்டு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் போது, உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறோம். அத்துடன் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்து இருக்கும் வழிகாட்டி நெறிமுறைகளை கணக்கில் எடுத்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளோம் என்று அவர் கூறினார்.


Next Story