ஊக்க மருந்து குற்றச்சாட்டில் இருந்து நீக்கம்: சஞ்சிதா சானுக்கு அர்ஜூனா விருது கிடைக்க வாய்ப்பு


ஊக்க மருந்து குற்றச்சாட்டில் இருந்து நீக்கம்: சஞ்சிதா சானுக்கு அர்ஜூனா விருது கிடைக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 11 Jun 2020 10:30 PM GMT (Updated: 11 Jun 2020 8:30 PM GMT)

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2 முறை (2014, 2018) தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2 முறை (2014, 2018) தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஊக்க மருந்து சோதனையின் போது எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியின் நம்பர் மாறியதால் இந்த தவறு நடந்து விட்டதாக ஒப்புக்கொண்ட சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் சஞ்சிதா சானுவின் இடைநீக்கத்தை கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் ரத்து செய்தது. ஆனாலும் அவர் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு நிலுவையில் இருந்து வந்தது. 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விவகாரம் நீடித்து வந்ததால் சஞ்சிதா சானுவின் பெயர் அர்ஜூனா விருது தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே, ஊக்க மருந்து குற்றச்சாட்டில் இருந்து சஞ்சிதா சானுவின் பெயரை நீக்கி இருப்பதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் சஞ்சிதா சானு அர்ஜூனா விருது பெறுவதற்கு இருந்து வந்த முட்டுக்கட்டை நீங்கி இருக்கிறது. 2017-ம் ஆண்டு அர்ஜூனா விருது தேர்வின் போது சஞ்சிதா சானுவின் பெயர் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் அவர் ஊக்க மருந்து சர்ச்சையை சந்தித்தார். அந்த வழக்கு முடிவில், ‘அர்ஜூனா விருதுக்கு சஞ்சிதா சானுவின் பெயரை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று விருது தேர்வு கமிட்டிக்கு அறிவுறுத்திய நீதிபதி அந்த முடிவை சீல் வைத்த கவரில் வைத்து இருக்க வேண்டும் என்றும் அவர் ஊக்க மருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுபட்ட பிறகு வெளியிட வேண்டும்’ என்றும் தெரிவித்து இருந்தார். தற்போது ஊக்க மருந்து விவகாரத்தில் இருந்து சஞ்சிதா சானு முழுமையாக விடுபட்டு விட்டதால் இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருது பட்டியலில் சஞ்சிதா சானுவின் பெயர் இடம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அத்துடன் மத்திய விளையாட்டு அமைச்சகமும் சஞ்சிதா சானு பிரச்சினையில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Next Story