ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறியதாக புகார்: 100 மீட்டர் உலக சாம்பியன் கோல்மேன் இடைநீக்கம் - தடை விதிக்கப்பட வாய்ப்பு


ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறியதாக புகார்: 100 மீட்டர் உலக சாம்பியன் கோல்மேன் இடைநீக்கம் - தடை விதிக்கப்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 17 Jun 2020 11:31 PM GMT (Updated: 17 Jun 2020 11:31 PM GMT)

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

நியூயார்க், 

தோகாவில் கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மேன் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். 9.76 வினாடிகளில் இலக்கை எட்டிய அவரே உலகின் அதிவேக மனிதராக அழைக்கப்படுகிறார். அந்த போட்டியில் தொடர் ஓட்டத்திலும் மகுடம் சூடியிருந்தார். இந்த நிலையில் கோல்மேன் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

போட்டி இல்லாத காலங்களிலும் முன்னணி வீரர், வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதற்கு வசதியாக அவர்கள் பயிற்சி செய்யும் இடங்கள், நேரம், இதர பணிகள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கு இ-மெயிலில் தெரியப்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் 60 நிமிடங்கள் தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு சோதனைக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

ஓராண்டில் மூன்று முறை தாங்கள் எங்கு இருக்கிறோம் என்ற விதிமுறையை மீறும் போது தடை நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். தோகா உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு முன்பாக கோல்மேன் இத்தகைய பிரச்சினையில் சிக்கினார். பிறகு தொழில்நுட்ப குளறுபடியை சுட்டிகாட்டி தப்பித்தார். இப்போது அவர் மறுபடியும் இதே சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கிறார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் தான் எங்கு இருக்கிறேன் என்ற ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய அவர் டிசம்பர் 9-ந்தேதியும் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தவறினார். ஓராண்டில் 3-வது முறையாக இந்த விதிமுறையை மீறியதால் அவரை உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் தடகளத்திற்கான நேர்மை யூனிட் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. இது பற்றி விசாரணை நடக்கிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு வரை தடை விதிக்கப்படும். அவ்வாறு நிகழ்ந்தால் அவரால் 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது.

கோல்மேன் விளக்கம்

இந்த விவகாரம் குறித்து 24 வயதான கோல்மேன் டுவிட்டரில் அளித்த விளக்கத்தில் ‘கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி குறிப்பிட்ட நேரத்தில் நான் பக்கத்தில் சிறிது நேரம் ஷாப்பிங் சென்று விட்டு வந்தேன். அந்த இடைவெளியில் ஊக்கமருந்து எடுப்பவர் எனது வீட்டுக்கு வந்து விட்டு சென்றதாக கூறுகிறார்கள். ஆனால் அவர் ஒரு மணி நேரம் அங்கு இருக்கவில்லை. அவர் எனக்கு போன் செய்திருந்தால், நான் வீட்டிலேயே இருந்திருப்பேன். வழக்கமாக மாதிரிகள் சேகரிக்க வரும் நபர், எனக்கு போன் செய்வார். ஆனால் இந்த முறை நான் இச்சோதனையை தவற விட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் செயல்பட்டு இருப்பது போல் தோன்றுகிறது.

இந்த சம்பவத்துக்கு பிறகு கூட நான் பல முறை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்திக் கொண்டு உள்ளேன்.

உடல்திறனை அதிகரிக்க நான் ஒரு போதும் ஊக்கமருந்து பயன்படுத்தியதில்லை. ‘நான் தவறு செய்வதில்லை’ என்பதை நிரூபிக்க எனது விளையாட்டு வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஊக்கமருந்து சோதனைக்கு தயாராக இருப்பேன்.

உலக மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. ஆனால் தற்போதைய நடைமுறைகளில் மாற்றம் தேவை’ என்று கூறியுள்ளார்.

Next Story