பிற விளையாட்டு

இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் புறக்கணித்த பிரனாய் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்தார், கோபிசந்த் + "||" + Badminton | Gopi Chand recommends Prannoy for Arjuna Award

இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் புறக்கணித்த பிரனாய் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்தார், கோபிசந்த்

இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் புறக்கணித்த பிரனாய் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்தார், கோபிசந்த்
ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக அர்ஜூனா விருதுக்கு பிரனாய் பெயரை இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் புறக்கணித்த நிலையில் பயிற்சியாளர் கோபிசந்த் அவரது பெயரை விருதுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்.
ஐதராபாத்,

இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் இந்த மாத தொடக்கத்தில் சமீர் வர்மா, இரட்டையர் பிரிவு வீரர்கள் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்க கோரி அவர்களது பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. இதில் தனது பெயர் விடுபட்டதால் கொதித்தெழுந்த இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரர்களில் ஒருவரான 27 வயதான எச்.எஸ்.பிரனாய் தனது டுவிட்டர் பக்கத்தில் பேட்மிண்டன் சம்மேளனத்தை கடுமையாக சாடினார்.

‘காமன்வெல்த் போட்டி மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவர் பெயரை சம்மேளனம் பரிந்துரை கூட செய்யவில்லை. இது போன்ற பெரிய போட்டிகளில் சாதிக்காதவர் பெயர் (சமீர் வர்மாவை குறிப்பிட்டு) விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது நல்ல நகைச்சுவை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் பிலிப்பைன்சில் நடந்த ஆசிய அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியின் போது இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்தும், பிரனாயும் பாதியிலேயே விலகினர். அணி நிர்வாகம் தொடர்ந்து விளையாடும்படி வற்புறுத்தியும் செவிசாய்க்காத அவர்கள் ஒலிம்பிக் வாய்ப்புக்காக தங்களது தரவரிசையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பார்சிலோனா போட்டிக்கு கிளம்பினர்.

ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியா அரைஇறுதியில் தோல்வியை தழுவியது. இந்த ஒழுங்கீன செயல்களுக்காகத் தான் அவர்களது பெயர் விருதுக்கு சிபாரிசு செய்யப்படவில்லை. பிறகு ஸ்ரீகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதுடன், வருங்காலத்தில் இது போன்று நடந்து கொள்ளமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்ததால் அவரது பெயர் கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் பேட்மிண்டன் சம்மேளனத்தை வெளிப்படையாக விமர்சித்த பிரனாய் 15 நாட்களுக்குள் விளக்க அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய விளக்கம் தராவிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேட்மிண்டன் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

ஒரு பக்கம் பேட்மிண்டன் சம்மேளனம் அவர் மீது அதிருப்தியில் உள்ள நிலையில் இன்னொரு புறம் தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், பிரனாயின் பெயரை உரிய விண்ணப்பத்துடன் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைத்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்திய கோபிசந்த் கூறுகையில், ‘நான் கேல்ரத்னா விருது பெற்றவன் என்பதன் அடிப்படையில் ஒரு வீரரின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்க முடியும். எனவே பிரனாயின் பெயரை விருதுக்கு அனுப்பினேன். கேல்ரத்னா பெற்றதுக்குரிய தகுதியின் அடிப்படையிலேயே அவரது பெயரை பரிந்துரை செய்தேனே தவிர, தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் என்ற வகையில் அல்ல. அவர் மீது ஒழுங்கீன பிரச்சினை இருப்பது இரு தினங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரியும்.

ஆனால் கடந்த 2-ந்தேதி விருது பரிந்துரை பட்டியலில் தனது பெயர் இல்லாததால் அவர் மிகுந்த வேதனையில் இருந்தார். அதனால் கேல்ரத்னா விருது பெற்றவன் என்ற வகையில் அவருக்கு உதவலாம் என்று நினைத்தேன். அதற்கு மறுநாளே (ஜூன் 3-ந்தேதி) அவரது பெயரை பரிந்துரை செய்து விட்டேன்’ என்றார்.