‘உலக பேட்மிண்டன் போட்டியில் மேலும் பதக்கம் வெல்வேன்’ பி.வி.சிந்து உறுதி


‘உலக பேட்மிண்டன் போட்டியில் மேலும் பதக்கம் வெல்வேன்’ பி.வி.சிந்து உறுதி
x

சர்வதேச ஒலிம்பிக் தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஐதராபாத், 

சர்வதேச ஒலிம்பிக் தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் உலக சாம்பியனும், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய பேட்மிண்டன் வீராங் கனை 24 வயது பி.வி.சிந்து கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

சர்வதேச பேட்மிண்டன் போட்டி மீண்டும் தொடங்கும் போது போட்டி அட்டவணைக்கு தகுந்தபடி புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான மனநிலையை கொண்டு இருப்பார்கள். ஆனாலும் இதுபோன்ற சோதனையான காலக்கட்டத்தில் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த ஆண்டில் அடுத்து வரப்போகும் பெரிய போட்டி சீனதைபேயில் செப்டம்பர் மாதம் நடைபெறப் போவதாகும். இந்த போட்டி நிச்சயம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த கடினமான நேரத்தில் புதிய விஷயங்களை மீண்டும் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. முன்பெல்லாம் நேரம் கிடைக்காததால் நான் சமையலறை பக்கம் திரும்பியது கிடையாது. ஆனால் தற்போது சமையல் செய்ய கற்று கொண்டு வருகிறேன். உலக பேட்மிண்டன் போட்டியில் இதுவரை 2 வெண்கலம், 2 வெள்ளி, ஒரு தங்கம் வென்று இருக்கிறேன். உலக போட்டியில் மேலும் அதிக பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன். எத்தகைய சவாலையும் சமாளித்து போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடினமாக பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். உடல் தகுதியை பேணுவதற்காக வழக்கமான உடற்பயிற்சியுடன் யோகா மற்றும் தியானத்திலும் ஈடுபடுகிறேன். அது களத்தில் சவாலை எதிர்கொள்வதை எளிதாக்குவதாக உணருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story