வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி திருமணம் நாளை மறுநாள் நடக்கிறது


வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி திருமணம் நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 27 Jun 2020 11:02 PM GMT (Updated: 27 Jun 2020 11:02 PM GMT)

தீபிகா குமாரி-அதானு தாஸ் திருமணம் ராஞ்சியில் உள்ள மொராபாடியில் நாளை மறுநாள் நடக்கிறது

ராஞ்சி, 

இந்திய நட்சத்திர வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த 26 வயதான தீபிகா உலக கோப்பை மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர். இரண்டு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். அவர், சகநாட்டு வில்வித்தை வீரரான 28 வயதான அதானு தாசை காதலித்தார். 2018-ம் ஆண்டு இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோய் விட்டது. இப்போதைக்கு எந்த போட்டிகளும், பயிற்சி முகாமும் இல்லை.

இந்த நிலையில் கொரோனா அச்சம், ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தீபிகா குமாரி-அதானு தாஸ் திருமணம் ராஞ்சியில் உள்ள மொராபாடியில் நாளை மறுநாள் நடக்கிறது. முக்கியமானவர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. அழைப்பிதழில் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு சுகாதார வழிகாட்டுதலை பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.தீபிகா குமாரி கூறுகையில், ‘திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு முககவசம், சானிடைசர் வழங்கப்படும். திருமண நிகழ்ச்சி பெரிய ஹாலில் நடைபெறுகிறது. 

எனவே சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவோம். நாங்கள் யாரையும் தொடப்போவதில்லை. நாங்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும். மொத்தம் 60 அழைப்பிதழ் மட்டுமே வழங்கியுள்ளோம். மேலும் பலருக்கு போனில் அழைப்பு விடுத்திருக்கிறோம். மாலையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர்களை 2 பகுதியாக பிரித்துள்ளோம். முதல் ஒன்றரை மணி நேரம் 50 பேரும், அதன் பிறகு இன்னொரு 50 பேரும் வரும் வகையில் ஏற்பாடு செய்து உள்ளோம். குடும்ப உறுப்பினர்கள் எங்களது வீட்டிலேயே இருப்பார்கள்’ என்றார்.



Next Story