2 முறை ஒலிம்பிக் சாம்பியன்: பிரபல பேட்மிண்டன் வீரர் லின் டான் ஓய்வு


2 முறை ஒலிம்பிக் சாம்பியன்: பிரபல பேட்மிண்டன் வீரர் லின் டான் ஓய்வு
x
தினத்தந்தி 4 July 2020 10:00 PM GMT (Updated: 4 July 2020 8:26 PM GMT)

பேட்மிண்டன் ஜாம்பவான்களில் ஒருவரான சீனாவின் லின் டான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

பீஜிங்,

பேட்மிண்டன் உலகில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வெற்றிக்கொடி நாட்டியவர், லின் டான் (சீனா). இடக்கையால் மட்டையை சுழட்டும் அவர் 2008 மற்றும் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். உலக சாம்பியன்ஷிப்பில் 5 முறையும், ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனில் 6 முறையும் பட்டத்தை கைப்பற்றி வியப்பூட்டினார். இவற்றோடு சேர்த்து ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், உலக கோப்பை, தாமஸ் கோப்பை, சுதிர்மன் கோப்பை, சூப்பர் சீரிஸ் மாஸ்டர்ஸ் இறுதிசுற்று போட்டிகளிலும் பட்டம் வென்றுள்ளார். ‘சூப்பர் கிராண்ட்ஸ்லாம்’ என்று அழைக்கப்படும் இந்த 9 பிரதான பேட்மிண்டன் போட்டிகளிலும் தனது 28 வயதுக்குள் மகுடம் சூடி உலகின் மிகச்சிறந்த வீரராக விளங்கினார். வேறு எந்த வீரரும் இச்சாதனையை செய்ததில்லை. அத்துடன் நீண்ட காலம் ‘நம்பர் ஒன்’ வீரராகவும் வலம் வந்தார். இதுவரை 666 வெற்றிகள் குவித்துள்ளார்.

ரசிகர்களால் ‘சூப்பர் டான்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட லின் டான் 30 வயதை கடந்த பிறகு பெரிய அளவில் சாதிக்கவில்லை. 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் அரைஇறுதியுடன் வெளியேறினார். திறமையான இளம் வீரர்களின் வருகையாலும், அடிக்கடி காயம் மற்றும் ஆட்டத்திறன் பாதிப்பாலும் தடுமாற்றம் கண்ட அவர் தரவரிசையிலும் பின்தங்கினார். தற்போது தரவரிசையில் 19-ம் வகிக்கும் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியாத நெருக்கடியில் தவித்தார். இதற்கிடையே கொரோனா பரவலால் ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் 36 வயதான லின் டான் பேட்மிண்டனில் இருந்து விடைபெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நான் விரும்பிய விளையாட்டுக்காக எல்லாவற்றையும் அர்ப்பணித்துள்ளேன். எனது குடும்பத்தினர், பயிற்சியாளர், அணி உதவியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என்னுடன் மகிழ்ச்சியான நேரம் மற்றும் கடினமான தருணங்களில் இருந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. எனக்கு 36 வயது ஆகிறது. உடல் வலியும், காயங்களும் சக வீரர்களுக்கு சவால் அளிக்கக்கூடிய அளவுக்கு இனி அனுமதிக்காது. இதனால் ஓய்வு முடிவுக்கு வந்தேன். 2000-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டு வரை அங்கம் வகித்த சீனா அணியை விட்டு வெளியேறுவது என்பது கடினமானது’ என்றார்.

லின் டானின் பிரதான எதிரியான மலேசியாவின் லீ சோங் வெய் மூக்கில் ஏற்பட்ட புற்றுநோயால் கடந்த ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் 40 முறை மோதி அதில் 28-ல் லின் டான் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story