பிற விளையாட்டு

‘ஆன்லைன் பயிற்சி’ மேற்கொள்ளும் தீபா கர்மாகர் + "||" + Deepa Karmakar taking ‘online training’

‘ஆன்லைன் பயிற்சி’ மேற்கொள்ளும் தீபா கர்மாகர்

‘ஆன்லைன் பயிற்சி’ மேற்கொள்ளும் தீபா கர்மாகர்
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் தீபா கர்மாகரின் வீட்டுக்கும் அவரது பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தியின் வீட்டுக்கும் இடையில் 2 கி.மீ. தூரம்தான் இருக்கிறது. ஆனாலும் ஆன்லைன் வழியாகப் பயிற்சி பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார், இந்த இந்திய ஜிம்னாஸ்டிக் நட்சத்திரம்.
கொரானா முடக்கத்தின் காரணமாக வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் அதை பிரயோஜனமாகப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார், தீபா. வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிகளை காலை, மாலை வேளைகளில் மேற்கொள்கிறார். அது தொடர்பாக பயிற்சியாளர் பிஸ்வேஸ்வரிடம் ஆன்லைன் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் அவ்வப்போது ஆலோசனை பெறுகிறார்.


தீபா இந்த நெருக்கடி நேரத்திலும் பயிற்சியில் தீவிரமாக இருப்பது, அவரைப் பற்றி அறிந்தவர்களுக்கு ஆச்சரியமான விஷயமில்லை. அவர் எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயம் அது.

ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் நான்காம் இடம் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்த தீபா, அதன் பிறகு தொடர்ச்சியாக காயத்தால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார். 2017-ல் அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயத்தால், சுமார் ஓராண்டு காலம் ஜிம்னாஸ்டிக்கை விட்டு ஒதுங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்தக் காயத்தில் இருந்து மீண்டுவந்த தீபா, துருக்கியில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்ட்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சேலஞ்ச் கோப்பையில் தங்கம் வென்றார். ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் வெண்கலம் பெற்றார். இப்படி தீபாவின் வெற்றிநடை தொடர்ந்த அதே ஆண்டில்தான் அவர் காயத்தால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து விலக வேண்டி வந்தது.

கடந்த ஆண்டிலும் தீபாவை காயங்கள் துரத்தின. அதனால், அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகளில் ஒன்றான தோகா உலகக்கோப்பை போட்டியில் தீபாவால் கலந்துகொள்ள இயலவில்லை. இவற்றின் விளைவாக, தீபாவின் ஒலிம்பிக் கனவு கானலாகிவிடும் என்று கருதப்பட்ட நிலையில், அந்தப் போட்டி தள்ளிவைக்கப்படிருப்பதால் அவருக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

“ஒலிம்பிக்குக்கான 8 தகுதிப்போட்டிகளில் இன்னும் 2 பாக்கி இருக்கின்றன. தீபா அவற்றில் பதக்கங்கள் வென்றால் அவரால் ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற முடியும். ஆனால் அவர் இப்போதுதான் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது” என்று எச்சரிக்கையாகச் சொல்கிறார், தீபாவின் பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தி.

தீபா கர்மாகர் மீது ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்புச் சுமையை ஏற்றாமல், அவர் சாதிக்க வாழ்த்துவோம்.