தேசிய ஊக்க மருந்து சோதனைக்கூடத்தின் மீதான இடைநீக்கம் தொடரும் உலக முகமை அறிவிப்பு


தேசிய ஊக்க மருந்து சோதனைக்கூடத்தின் மீதான இடைநீக்கம் தொடரும் உலக முகமை அறிவிப்பு
x
தினத்தந்தி 22 July 2020 10:15 PM GMT (Updated: 22 July 2020 8:13 PM GMT)

தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை, உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தாமல் தடுக்கும் பணிகளில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை, உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இந்திய வீரர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள் (சிறுநீர் மற்றும் ரத்தம்) டெல்லியில் அமைந்துள்ள தேசிய ஊக்க மருந்து சோதனைக்கூடத்தில் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால் டெல்லியில் உள்ள தேசிய ஊக்க மருந்து சோதனைக்கூடத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஆய்வு செய்த உலக ஊக்க மருந்து தடுப்பு முககையின் அதிகாரிகள் இந்த சோதனைக்கூடத்தில் உள்ள வசதிகள் சர்வதேச தரத்துக்கு இணையானதாக இல்லை என்று கூறி அதன் அங்கீகாரத்தை 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். சோதனைக்கூடத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக நிவர்த்தி செய்து விட்டு விண்ணப்பித்தால் மீண்டும் அங்கீகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் சோதனைக்கூட நிபுணர்கள், தேசிய ஊக்க மருந்து சோதனைக்கூடத்தை மீண்டும் ஆய்வு செய்தனர். அப்போது சோதனைக்கூடத்தின் தரம் சர்வதேச தரத்துக்கு சமமாக சீரமைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கமிட்டியினர் தங்களது ஆய்வறிக்கையை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையிடம் தாக்கல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய தனிப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு தேசிய ஊக்க மருந்து சோதனைக்கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உலக முகமைக்கு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து டெல்லி தேசிய ஊக்க மருந்து சோதனக்கூடத்தின் அங்கீகார இடைநீக்கத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இடைநீக்கம் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடரும். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் இந்திய வீரர்களின் மாதிரியை தேசிய ஊக்க மருந்து சோதனைக்கூடத்தில் பரிசோதிக்க முடியாது. வெளிநாட்டில் உள்ள அங்கீகாரம் பெற்ற சோதனைக்கூடத்துக்கு அனுப்பி தான் சோதனை செய்ய முடியும். இதனால் கால விரயம் ஆவதுடன், செலவும் அதிகரிக்கும்.

Next Story