துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 30 July 2020 11:19 PM GMT (Updated: 30 July 2020 11:19 PM GMT)

இந்திய துப்பாக்கி சுடுதல் அணியினருக்கான பயிற்சி முகாம் டெல்லியில் உள்ள கர்னிசிங் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.

* இந்திய துப்பாக்கி சுடுதல் அணியினருக்கான பயிற்சி முகாம் டெல்லியில் உள்ள கர்னிசிங் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த மைதானத்தில் பணியாற்றும் துப்பாக்கி சுடுதல் பெண் பயிற்சியாளர் (இந்திய விளையாட்டு ஆணையம்) ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் மைதானம் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருக்கும் பயிற்சியாளர் கடந்த 24-ந் தேதி ஸ்டேடியத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்துக்கு வந்தார். ஆனால் அவர் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு செல்லவில்லை. மையத்தில் பயிற்சி பெறும் வீரர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை. கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சுடுதல் வீரர்களின் பயிற்சிக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சவுதம்டனில் நேற்றிரவு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 44.4 ஓவர்களில் 172 ரன்களில் ‘ஆல்-அவுட்’ ஆனது. ஒரு கட்டத்தில் 28 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த அந்த அணியை கேம்பெர் (59 ரன்), ஆன்டி மெக்பிரைன் (40 ரன்) கவுரவமான நிலைக்கு உயர்த்தினர். வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து 173 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடியது.

* ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் சிக்கி ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளார் கனேரியா அளித்த ஒரு பேட்டியில், ‘ஊழல் விவகாரத்தில் துளியும் சகித்துக்கொள்ள முடியாதது தான் தங்களது கொள்கை என்று கூறும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உமர் அக்மல் மீதான சூதாட்ட புகாரில் தவறு செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டும் அவருக்கு கருணை அடிப்படையில் தண்டனையை பாதியாக குறைத்தது எப்படி?. சூதாட்டத்தில் சிக்கி தண்டனை பெற்ற முகமது அமிர், முகமது ஆசிப், சல்மான் பட் ஆகியோரை அணிக்கு திரும்ப அனுமதி அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை மட்டும் வெளியேற்றியது ஏன்?. என் விவகாரத்தில் அவர்கள் மதரீதியான பாகுபாடு காட்டுவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது’ என்றார்.

Next Story