ஷேவாக், சர்தார்சிங் உள்பட 12 பேர் கொண்ட தேசிய விளையாட்டு விருது கமிட்டி அமைப்பு


ஷேவாக், சர்தார்சிங் உள்பட 12 பேர் கொண்ட தேசிய விளையாட்டு விருது கமிட்டி அமைப்பு
x
தினத்தந்தி 31 July 2020 11:35 PM GMT (Updated: 31 July 2020 11:35 PM GMT)

ஷேவாக், சர்தார்சிங் உள்பட 12 பேர் கொண்ட தேசிய விளையாட்டு விருது கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச போட்டிகளில் சாதிக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா, வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான்சந்த் ஆகிய விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு வந்துள்ளன. இவற்றில் விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய 12 பேர் கொண்ட கமிட்டியை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அமைத்தது. இந்த கமிட்டியில் இந்திய முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் ஷேவாக், ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை தீபா மாலிக், முன்னாள் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மோனலிசா, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் தேவராஜன் மற்றும் விளையாட்டுத்துறை செய்தியாளர்கள், விளையாட்டு அமைச்சக அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி முகுந்தகம் ஷர்மா கமிட்டியின் தலைவராக இருப்பார். இவர்கள், வீரர்களின் சாதனை, செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்வார்கள்.

1994-ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த உலக கோப்பை குத்துச்சண்டையில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றி வரலாறு படைத்தவரான தேவராஜன் தற்போது தெற்கு ரெயில்வேயில் விளையாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சென்னையில் வசிக்கும் 47 வயதான தேவராஜன் கூறுகையில், ‘தேசிய விளையாட்டு விருது கமிட்டிக்கு என்னை 3-வது முறையாக தேர்வு செய்து இருக்கிறார்கள். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். கமிட்டியினர் சந்திப்பு குறித்து பிறகு தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளனர். விமான போக்குவரத்து சரியானதும் விருது கமிட்டி கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது’ என்றார்.

வழக்கமாக தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா ஆகஸ்டு 29-ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். இந்த முறை கொரோனா பாதிப்பு எதிரொலியாக விருது விழா ஓரிரு மாதங்கள் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story