பிற விளையாட்டு

8 முறை ஒலிம்பிக் சாம்பியன் உசேன் போல்ட் கொரோனாவால் பாதிப்பு + "||" + 8-time Olympic champion Hussein Bolt confirms Corona

8 முறை ஒலிம்பிக் சாம்பியன் உசேன் போல்ட் கொரோனாவால் பாதிப்பு

8 முறை ஒலிம்பிக் சாம்பியன் உசேன் போல்ட் கொரோனாவால் பாதிப்பு
உசேன் போல்ட்டுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கிங்ஸ்டன்,

உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக வலம் வந்த ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட் 2017-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் கைப்பற்றிய சரித்திர நாயகனான உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.58 வினாடிகளில் இலக்கை கடந்து உலக சாதனையும் நிகழ்த்தியிருக்கிறார். ஒலிம்பிக்கில் மொத்தம் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கம் உள்பட 14 பதக்கமும் குவித்து தடகள ஜாம்பவனாக அறியப்படுகிறார்.


மூன்று தினங்களுக்கு முன்பு உசேன் போல்ட் தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடினார். நண்பர்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று அமர்க்களப்பட்டது. உற்சாகத்தில் திளைத்த அவர்களில் யாரும் முககவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை.

இந்த நிலையில் உசேன் போல்ட்டுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட உசேன் போல்ட், தன்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும், பாதுகாப்புடன் இருக்கும்படியும் வீடியோ பதிவு மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரபல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் கெய்லுக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இதனால் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இணைவதில் உள்ள சிக்கல் நீங்கியது.