விளையாட்டு துளிகள்.....


விளையாட்டு துளிகள்.....
x
தினத்தந்தி 31 Aug 2020 10:00 PM GMT (Updated: 31 Aug 2020 7:55 PM GMT)

விளையாட்டு துளிகள்.....

சென்னை,

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க 8 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் சிந்து, சிக்கி ரெட்டி, சாய் பிரனீத், ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். பயிற்சி முகாம் குறித்து இந்திய பேட்மிண்டன் அணியின் வெளிநாட்டு பயிற்சியாளர் அகுஸ் டி சான்டோசோ (இந்தோனேஷியா) கருத்து தெரிவிக்கையில், ‘தற்போதைய சூழ்நிலை கவலை அளிக்கிறது. கொரோனா வைரசுடன் வாழ நாம் பழகி கொள்ள வேண்டும். இதற்கு நாம் அரசு விதித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமானதாகும். எனது திட்டங்களை அமல்படுத்த பயிற்சிக்கு அதிக வீரர்கள் தேவையாகும்’ என்றார்.

* இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை அணியில் 2 வீரர்கள் உள்பட சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது எங்களுக்கு சற்று கவலை அளிக்கிறது. சென்னை வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள். அது முடிந்த பிறகு இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். தற்போது எங்கள் கவனம் எல்லாம் இங்கிலாந்து தொடரில் தான் இருக்கிறது. ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் சில வாரங்கள் இருப்பதால் அது குறித்து நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ஐ.பி.எல். போட்டி நெருங்கும் சமயத்தில் கொரோனா பிரச்சினை எழுந்தால் அது குறித்து நாங்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம்’ என்று தெரிவித்தார்.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக் ‘யூடியூப்’ சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ‘பவர்பிளே’யில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் 40-45 ரன்கள் விட்டுக்கொடுத்து இருந்த போது டெலிவிஷன் கேமராவில் ஸ்டேடியத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக்கை காண்பித்தார்கள். அவர் தலையில் கைகளை வைத்தபடி இருந்தார். இது மோசமான செயலாகும். போட்டியின் முடிவு யாருக்கும் சாதகமாக அமையலாம் என்ற நிலையில் இருக்கையில் இதுபோன்ற எதிர்மறையான செயலை காட்டுவது சரியானது கிடையாது. வீரர்கள் ஒய்வறையில் இருந்து நேர்மறையான சிந்தனைகள் வீரர்களுக்கு செல்ல வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்’ என்று சாடியுள்ளார்.

* இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி ஆன்-லைன் மூலம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை அதிகமான அளவிலான மக்கள் பார்ப்பார்கள் என்று ஒளிபரப்பு நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஏனெனில் ஸ்டேடியம் சென்று நேரில் பார்க்க அனுமதி கிடையாததால் டெலிவிஷன் மூலம் அதிகமானவர்கள் பார்ப்பார்கள் என்று நம்பப்படுகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. விரைவில் 30 சதவீத ரசிகர்களை சமூக இடைவெளியுடன் மைதானத்தில் பார்க்கலாம். ஆனால் அதற்கு ஒரு குறிப்பிட காலம் பிடிக்கும். தடுப்பூசி வந்து விட்டால் எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்’ என்றார்.

* இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் சவுதம்டனில் முறையே வருகிற 4, 6, 8-ந் தேதிகளிலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் மான்செஸ்டரில் முறையே வருகிற 11, 13, 16-ந் தேதிகளிலும் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இயான் மோர்கன் தலைமையிலான 20 ஓவர் அணியில் டெஸ்ட் கேப்டன் ஜோரூட்டுக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஆனால் ஒருநாள் போட்டி அணியில் அவர் இடம் பெற்றுள்ளார்.

Next Story