துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 10 Sep 2020 10:43 PM GMT (Updated: 10 Sep 2020 10:43 PM GMT)

சுவீடன் நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்களின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.

* துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உதவியாளர்கள் உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் தீபக் சாஹர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இருப்பது உறுதியாகி இருக்கிறது. அவருக்கு நடத்தப்பட்ட 2 பரிசோதனையின் முடிவும் ‘நெகட்டிவ்’ என்று வந்து இருப்பதால் அவர் ஓட்டலில் அணியினருடன் இணைந்து இருக்கிறார்.

* சுவீடன் நாட்டில் கிரிக்கெட் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்களின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சுவீடன் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்சை அந்த நாட்டு கிரிக்கெட் சம்மேளனம் நியமித்துள்ளது.

* டென்மார்க்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறும் தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டிக்கான இந்திய அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் தலைமையிலான தாமஸ் கோப்பை அணியில் காஷ்யப், லக்‌ஷயாசென் உள்பட 10 வீரர்களும், பி.வி.சிந்து தலைமையிலான உபேர் கோப்பை அணியில் சாய்னா நேவால், அஸ்வினி உள்பட 10 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். இந்த போட்டிக்காக இந்திய அணிகளை தயார்படுத்த ஐதராபாத்தில் கடந்த 7-ந் தேதி முதல் வருகிற 27-ந் தேதி வரை பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதையொட்டி வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்றுவதில் இந்திய விளையாட்டு ஆணையத்துக்கும், இந்திய பேட்மிண்டன் சங்கத்துக்கும் ஏற்பட்ட இழுபறி பிரச்சினையில் இந்த பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் நடந்த உரையாடலில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் சுமித்திடம் ரசிகர் ஒருவர் சிறந்த ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன் யார்? என்று கேட்டார். அதற்கு எந்தவித தயக்கமும் இன்றி, ‘தற்போது இந்தியாவின் விராட் கோலி தான் உலகின் சிறந்த ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்’ என்று சுமித் பதில் அளித்தார்.

Next Story