விளையாட்டு துளிகள்


விளையாட்டு துளிகள்
x
தினத்தந்தி 12 Oct 2020 10:00 PM GMT (Updated: 12 Oct 2020 7:25 PM GMT)

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களம் இறங்கவில்லை.

* டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக அலெக்ஸ் கேரி அணியில் இடம் பிடித்தார். ரிஷாப் பண்ட் ஆடாதது குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ட போது, ‘ரிஷாப் பண்ட் எப்போது? களம் திரும்புவார் என்பது எனக்கு தெரியாது. காயம் காரணமாக குறைந்தபட்சம் அவருக்கு ஒரு வாரம் ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக அணியின் டாக்டர் தெரிவித்தார். அவர் வலுவாக களம் திரும்புவார் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார். நாளை நடைபெறும் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் ரிஷாப் பண்ட் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சேர்மனாக இருந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் முடிவடைந்தை தொடர்ந்து அவர் கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார். இடைக்கால சேர்மனாக இம்ரான் கவாஜா (சிங்கப்பூர்) இருந்து வருகிறார். புதிய சேர்மன் தேர்வு குறித்து பலமுறை ஐ.சி.சி. கூட்டம் நடந்தாலும் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் புதிய சேர்மன் தேர்வுக்கான பணிகள் தொடங்கி இருக்கின்றன. புதிய சேர்மன் பதவிக்கான வேட்பாளரை ஐ.சி.சி. இயக்குனர்கள் முன்வொழிவார்கள். அதில் போட்டி நிலவினால் தேர்தல் நடத்தப்படும். புதிய சேர்மனுக்கான வேட்பாளரை முன்மொழிய வருகிற 18-ந் தேதி கடைசி நாளாகும் என்று ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. புதிய சேர்மன் தேர்தல் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று தெரிகிறது.

* 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல். ) கால்பந்து போட்டி கோவாவில் அடுத்த மாதம் (நவம்பர்) தொடங்கி நடக்கிறது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் கோவா சென்று ஓட்டலில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு இருக்கின்றன. அப்போது அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7 வீரர்கள் மற்றும் ஒரு உதவி பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* ஐ.பி.எல். போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் களம் கண்ட அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story