பார்முலா1 கார் பந்தயம்: 7-வது முறையாக பட்டம் வென்றார், ஹாமில்டன் சூமாக்கரின் சாதனையை சமன் செய்தார்


பார்முலா1 கார் பந்தயம்: 7-வது முறையாக பட்டம் வென்றார், ஹாமில்டன் சூமாக்கரின் சாதனையை சமன் செய்தார்
x
தினத்தந்தி 15 Nov 2020 8:53 PM GMT (Updated: 15 Nov 2020 8:53 PM GMT)

பார்முலா1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் 7-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கி சூமாக்கரின் உலக சாதனையை சமன் செய்தார்.

இஸ்தான்புல், 

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 14-வது சுற்றான துருக்கி கிராண்ட்பிரி அங்குள்ள இஸ்தான்புல் நகரில் நேற்று நடந்தது. இதில் 309.396 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.யாரும் எதிர்பாராத வகையில் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த கனடா இளம் வீரர் லான்ஸ் ஸ்ட்ரோல் (ரேசிங் பாயிண்ட் அணி) முதல் வரிசையில் இருந்து காரை செலுத்தினாலும் அவரால் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைக்க முடியவில்லை.

6-வது வரிசையில் இருந்து காரை மின்னல் வேகத்தில் கிளப்பிய நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) ஈரப்பதமான ஓடுபாதை சூழலை திறம்பட சமாளித்து 1 மணி 42 நிமிடம் 19.313 நிமிடங்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. இந்த சீசனில் அவர் சுவைத்த 10-வது வெற்றி இதுவாகும். அவரை விட 31.633 வினாடி பின்தங்கிய மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் 2-வதாக வந்து 18 புள்ளிகள் பெற்றார். முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 3-வதாக வந்து அதற்குரிய 15 புள்ளிகளை வசப்படுத்தினார். முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட லான்ஸ் ஸ்ட்ரோல் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஹாமில்டனுக்கு பலமான போட்டியாளராக திகழும் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) இந்த முறை 14-வது இடத்துக்கு பின்தங்கிப்போனார்.

ஹாமில்டன் சாம்பியன்

இதுவரை நடந்துள்ள 14 சுற்று முடிவில் ஹாமில்டன் 307 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வால்டெரி போட்டாஸ் 197 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) 170 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை ஹாமில்டன் கைப்பற்றினார். எஞ்சிய 3 பந்தயத்தில் அவர் தோற்றாலும் பிரச்சினை இல்லை. ஹாமில்டன் இந்த பட்டத்தை வெல்வது இது 7-வது முறையாகும். ஏற்கனவே 2008, 2014, 2015, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருந்தார். இதன் மூலம் பார்முலா1 கார்பந்தய வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்றவரான ஜெர்மனியைச் சேர்ந்த ஜாம்பவான் மைக்கேல் சூமாக்கரின் (7 முறை) சாதனையை சமன் செய்தார். ஏற்கனவே சூமாக்கரின் 91 பந்தய வெற்றி சாதனையையும் ஹாமில்டன் முறியடித்தது நினைவிருக்கலாம்.

35 வயதான ஹாமில்டன் கூறுகையில், ‘மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. நடந்த விதம் எல்லாமே கனவுக்கு அப்பாற்பட்டது. 7 பட்டம் என்பது நம்ப முடியாத ஒன்று’ என்றார். அடுத்த சுற்று போட்டி வருகிற 29-ந்தேதி பக்ரைனில் நடக்கிறது.

Next Story