டெஸ்ட் போட்டிக்கு வேறுவிதமான அணுகுமுறை சச்சின் தெண்டுல்கர் பேட்டி - விளையாட்டு துளிகள்


டெஸ்ட் போட்டிக்கு வேறுவிதமான அணுகுமுறை சச்சின் தெண்டுல்கர் பேட்டி - விளையாட்டு துளிகள்
x
தினத்தந்தி 14 Dec 2020 10:30 PM GMT (Updated: 14 Dec 2020 8:41 PM GMT)

‘கொரோனா பரவல் காரணமாக பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த தடை விதித்து இருப்பதன் மூலம் பவுலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை.

* இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘கொரோனா பரவல் காரணமாக பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த தடை விதித்து இருப்பதன் மூலம் பவுலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. தற்போது எச்சிலுக்கு மாற்றாக பயன்படுத்த வேறு எதுவுமில்லை. பவுலர்கள் பந்தை பளபளப்பாக்க வியர்வையை காட்டிலும் எச்சிலை தான் அதிகம் நம்பி இருப்பார்கள். உண்மையை சொல்லப்போனால் பந்து வீச்சாளர்களுக்கான இந்த தடை என்பது பேட்ஸ்மேன்களை ஆப்-சைடில் ரன் எடுக்கக்கூடாது, ஆன்-சைடில் மட்டுமே ரன் திரட்ட வேண்டும் என்று சொல்வது போலாகும். குறுகிய வடிவிலான போட்டியும், டெஸ்ட் போட்டியும் வித்தியாசமானது. குறுகிய வடிவிலான (ஒருநாள், 20 ஓவர்) போட்டியில் செயல்பட்ட விதத்தை டெஸ்ட் போட்டியோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. குறுகிய வடிவிலான போட்டியில் நடந்ததை மறந்து பவுலர்கள் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். டெஸ்ட் போட்டிக்கு வேறுவிதமான அணுகுமுறையை கையாள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் கேப்டன் விராட்கோலி நாடு திரும்புகிறார். எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானே இந்திய அணியை வழிநடத்த இருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணில் அணியை வழிநடத்துவது கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விராட்கோலி நாடு திரும்பிய பிறகு இந்திய அணியை வழிநடத்தும் ரஹானேவுக்கு உண்மையிலேயே எந்தவித நெருக்கடியும் இருக்காது. அவர் ஏற்கனவே 2 முறை இந்திய அணிக்கு தலைமை தாங்கி வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார். தர்மசாலாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் ஆகியவற்றில் அவர் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார். எனவே கேப்டன்ஷிப்பை பொறுத்தமட்டில் அவருக்கு நெருக்கடி எதுவும் ஏற்படாது. 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் பொறுப்பு கேப்டன் தான் என்பது அவருக்கு தெரியும். எனவே கேப்டனாக இருப்பது அல்லது கேப்டனாக தொடருவது குறித்த சிந்தனை அவரது மனதில் இருக்காது. ரஹானே தனது கேப்டன் பதவியை நேர்மையாக செய்வார். பேட்ஸ்மேனாகவும் பொறுப்பாக விளையாடுவார்’ என்று கூறினார்.


* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் பேட்டிங் செய்கையில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஹெல்மெட்டில் பந்து தாக்கியதில் தலையில் அதிர்வு ஏற்பட்டதால் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக மாற்று வீரராக யுஸ்வேந்திர சாஹல் களம் இறங்கினார். அத்துடன் 20 ஓவர் போட்டி தொடரில் இருந்தும் விலகினார். இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

* 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்தவரும், இந்திய அணியின் முன்னாள் தேர்வாளருமான கீர்த்தி ஆசாத் டெல்லி மாநில சீனியர் அணியின் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார். 7 டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் 61 வயதான கீர்த்தி ஆசாத் கூறுகையில், ‘டெல்லி கிரிக்கெட் அணியின் தேர்வாளர் பதவிக்கு நான் விண்ணப்பித்து இருக்கிறேன். நான் தேசிய அணியின் தேர்வாளராக இருக்கையில் கவுதம் கம்பீர், ஷிகர் தவான் ஆகியோரை இந்திய அணிக்கு அறிமுக வீரராக தேர்வு செய்தேன். எனது கேப்டன் பிஷன் சிங் பெடி மற்றும் நிறைய கிரிக்கெட் ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளேன். டெல்லி கிரிக்கெட்டின் வெற்றிகரமான நாட்கள் திரும்புவதற்கு என்னால் முடிந்த முயற்சிகளை செய்வேன்’ என்றார்.

* சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான 3 நாள் பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் 2-வது இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 103 ரன்கள் குவித்த 23 வயது இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான ரிஷாப் பண்ட் இந்திய கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், ‘நான் பேட்டிங் செய்ய களம் இறங்குகையில் நிறைய ஓவர்கள் மீதம் இருந்தன. எனவே நானும், ஹனுமா விஹாரியும் முடிந்த அளவுக்கு நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடுவது என்று முடிவு செய்து ஆடினோம். மெதுவாக எனக்குள் நம்பிக்கை வளர ஆரம்பித்தது. சதம் அடித்தது எனது நம்பிக்கையை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கழுத்து பிடிப்பு காரணமாக முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் இன்னிங்சில் துரதிர்ஷ்டவசமாக தவறான எல்.பி.டபிள்யூ.வினால் ஆட்டம் இழந்தேன். 2-வது இன்னிங்சில் அதிக நேரம் நிலைத்து நின்று ஆடுவதில் கவனம் செலுத்தினேன். அதன் பலனாக எனக்கு நல்லதொரு இன்னிங்ஸ் அமைந்தது’ என்று தெரிவித்தார்.

Next Story