தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொள்வேன் - பி.வி.சிந்து உறுதி


தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொள்வேன் - பி.வி.சிந்து உறுதி
x
தினத்தந்தி 22 Dec 2020 9:30 PM GMT (Updated: 22 Dec 2020 6:29 PM GMT)

தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொள்வேன் என பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

உலக பேட்மிண்டன் சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி இருந்து பயிற்சி மேற்கொண்டு வருவதுடன், தனது உடல் தகுதியை மேம்படுத்த ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்று அதற்கு தகுந்தபடி செயல்பட்டு வருகிறார். 

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்துக்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளாத சிந்து உள்பட 8 இந்திய வீரர் வீராங்கனைகள் தாய்லாந்தில் அடுத்த மாதம் (ஜனவரி) 12-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும் யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன், டயோட்டா தாய்லாந்து ஓபன், உலக டூர் இறுதி சுற்று போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று இந்திய பேட்மிண்டன் சங்கம் சமீபத்தில் அறிவித்தது. 

தற்போது இங்கிலாந்தில் ஒருவித புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்து இருக்கின்றன. எனவே தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் பி.வி.சிந்து கலந்து கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டியில், ‘ஜனவரி முதல் வாரத்தில் தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளேன். இங்கிலாந்தில் இருந்து செல்பவர்களுக்கு தாய்லாந்தில் எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. வளைகுடா நாடு வழியாக தாய்லாந்து செல்ல இருக்கிறேன். லண்டனில் உள்ள தேசிய பயிற்சி மையம் மூடப்படவில்லை. கொரோனா மருத்துவ பாதுகாப்பு வசதியுடன் இயங்கி வருகிறது. இதனால் எனது பயிற்சி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்தார்.

Next Story