தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன்


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன்
x
தினத்தந்தி 24 Jan 2021 11:30 PM GMT (Updated: 24 Jan 2021 11:17 PM GMT)

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

பாங்காக்,

டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் அரைஇறுதியை தாண்டவில்லை. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின்(ஸ்பெயின்) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) தோற்கடித்து பட்டத்தை தட்டிச் சென்றார். 

கடந்த வாரம் நடந்த யோனெக்ஸ் தாய்லாந்து ஓபனிலும் இதே தாய் ஜூ யிங்கை வீழ்த்தி தான் கரோலினா மகுடம் சூடியது நினைவு கூரத்தக்கது. அவருக்கு தங்கப்பதக்கத்துடன் ரூ.51 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. ‘நான் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளேன். இரண்டு வாரங்களில் 2 சாம்பியன் பட்டம் வென்று இந்த ஆண்டை வியப்புக்குரிய வகையில் தொடங்கி இருக்கிறேன்’ என்று கரோலினா குறிப்பிட்டார். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-11, 21-7 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் ஹான்ஸ் கிறிஸ்டியன் சோல்பெர்க்கை பந்தாடி மீண்டும் பட்டத்தை சொந்தமாக்கினார். அடுத்ததாக உலக டூர் இறுதி சுற்று போட்டி இதே பாங்காக்கில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

Next Story