பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி: 2-வது ஆட்டத்திலும் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி - அரைஇறுதி வாய்ப்பை இழந்தனர் + "||" + World Badminton Tournament: Sindhu, Srikanth lose in 2nd match too - miss out on semi-finals

உலக பேட்மிண்டன் போட்டி: 2-வது ஆட்டத்திலும் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி - அரைஇறுதி வாய்ப்பை இழந்தனர்

உலக பேட்மிண்டன் போட்டி: 2-வது ஆட்டத்திலும் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி - அரைஇறுதி வாய்ப்பை இழந்தனர்
உலக பேட்மிண்டன் போட்டியில் 2-வது ஆட்டத்திலும் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வியடைந்து அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினர்.
பாங்காக்,

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். 2-வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் ‘பி’ பிரிவு 2-வது லீக் ஆட்டத்தில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 5-வது இடத்தில் உள்ள தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை சந்தித்தார். 43 நிமிடம் நடந்த இந்த மோதலில் சிந்து 18-21, 13-21 என்ற நேர்செட்டில் ராட்சனோக்கிடம் தோல்வியை தழுவினார். முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 11-6 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த சிந்துவால் அதனை தக்கவைத்து கொள்ள முடியாமல் போனது. கடந்த வாரம் தாய்லாந்து ஓபன் போட்டியில் ராட்சனோக்கிடம் தோல்வி அடைந்த சிந்து மீண்டும் அவரிடம் சரண் அடைந்திருக்கிறார். இந்த தொடரில் சிந்து முதல் ஆட்டத்தில் சீன தைபேயின் தாய் ஜூ யிங்கிடம் தோற்று இருந்தார்.

இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-19, 9-21, 19-21 என்ற செட் கணக்கில் போராடி சீன தைபே வீரர் வாங் ஜூ வெய்யிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 1 மணி 18 நிமிடம் நீடித்தது. ஸ்ரீகாந்த் தனது முதல் ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஆன்டோன்செனிடம் தோற்று இருந்தார். தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்த சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினர். இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் சிந்து, தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ சோச்சுவோங்கையும், ஸ்ரீகாந்த், ஹாங்காங் வீரர் நிகா லாங் அங்குஸ்சையும் எதிர்கொள்கிறார்கள். இது சம்பிரதாயத்துக்கான ஆட்டமாகும்.