‘டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்’ குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பேட்டி


‘டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்’ குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பேட்டி
x
தினத்தந்தி 11 March 2021 4:39 AM GMT (Updated: 11 March 2021 4:39 AM GMT)

இந்த நிலையில் மேரிகோம் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்.

புதுடெல்லி, 

இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம், பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 6 முறை பட்டம் வென்றவர். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றி வரலாறு படைத்தார். அடுத்து ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 51 கிலோ உடல் எடைப்பிரிவில் களம் காண தன்னை தயார்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மேரிகோம் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியே எனது கடைசி ஒலிம்பிக். வயது இங்கு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இப்போதே எனக்கு 38 வயதாகி விட்டது. அதன் பிறகு அடுத்த ஒலிம்பிக்குக்கு மேலும் 4 ஆண்டுகள் என்பது நீண்ட காலமாகும். தொடர்ந்து விளையாடி 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் நான் பங்கேற்க விரும்பினாலும் கூட நிச்சயம் என்னை அனுமதிக்க (ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்க அதிகபட்ச வயது வரம்பு 40) மாட்டார்கள்.

20 ஆண்டுகளாக குத்துச்சண்டை களத்தில் இருக்கிறேன். ஒலிம்பியன் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துச்சண்டை இல்லாததால் வாய்ப்புக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியது இருந்தது. ஒரு வழியாக 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துச்சண்டை பிரிவு சேர்க்கப்பட்டது. அதில் பங்கேற்று சாதித்து காட்டினேன். ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றது எனது வாழ்க்கையை மாற்றி விட்டது. இந்த வெற்றி நிறைய இளம் வீராங்கனைகள் குத்துச்சண்டை விளையாட்டை தேர்வு செய்வதற்கு உந்துசக்தியாக இருந்தது. ஒலிம்பிக்கில் நான் பங்கேற்காமல் இருந்திருந்தால் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக எனது விளையாட்டு வாழ்க்கையின் மதிப்பு குறைந்திருக்கும்’ என்றார்.

Next Story