‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ‘சாம்பியன்’


‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 11 March 2021 4:49 AM GMT (Updated: 11 March 2021 4:49 AM GMT)

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.

சென்னை, 

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் ஆச்சி குரூப் நிறுவனங்கள் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் கடைசி நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) 25-20, 15-25, 25-20, 14-25, 15-12 என்ற செட் கணக்கில் எஸ்.ஆர்.எம். அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி 23-25, 25-22, 25-21, 13-25, 16-14 என்ற செட் கணக்கில் போராடி ஐ.சி.எப். அணியை சாய்த்தது. 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்த ஐ.ஓ.பி. ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது. 7 வெற்றி, 2 தோல்வி கண்ட இந்தியன் வங்கி 2-வது இடத்தை பிடித்தது. சுங்க இலாகா, எஸ்.ஆர்.எம்., தமிழ்நாடு போலீஸ் அணிகள் தலா 6 வெற்றி, 3 தோல்வியுடன் சமநிலை வகித்தாலும், புள்ளிகள் அடிப்படையில் சுங்க இலாகா 3-வது இடத்தை தனதாக்கியது. எஸ்.ஆர்.எம். அணிக்கு 4-வது இடம் கிட்டியது.

பரிசளிப்பு விழாவுக்கு ஸ்ரீ பாலாஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் ஜெ.ஸ்ரீ நிஷா தலைமை தாங்கி பட்டம் வென்ற ஐ.ஓ.பி. அணிக்கு பரிசுக் கோப்பை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசை வழங்கினார். அடுத்த 3 இடங்களை பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் வீதம் பரிசாக அளிக்கப்பட்டது. வருமான வரி கூடுதல் கமிஷனர்கள் எஸ்.பாண்டியன், ஏ.சசிகுமார், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, துணைத் தலைவர் ஆர்.வி.எம்.ஏ. ராஜா, ‘காஸ்கோ’ மண்டல அதிகாரி முகமது ஹசன், செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் மகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் ஏ.பழனியப்பன், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகேசவன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Next Story