கப்பலில் நடக்கும் குத்துச்சண்டை: விஜேந்தரின் ஆதிக்கம் தொடருமா? ரஷிய வீரருடன் இன்று மோதுகிறார்


கப்பலில் நடக்கும் குத்துச்சண்டை: விஜேந்தரின் ஆதிக்கம் தொடருமா? ரஷிய வீரருடன் இன்று மோதுகிறார்
x
தினத்தந்தி 19 March 2021 3:26 AM GMT (Updated: 19 March 2021 3:26 AM GMT)

ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தொழில்முறை குத்துச்சண்டைக்கு மாறிய பிறகு தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு வருகிறார்.

பனாஜி, 

தொழில்முறை குத்துச்சண்டையில் இதுவரை ஆடியுள்ள 12 ஆட்டங்களிலும் வாகை சூடியுள்ளார். இதில் 8-ல் எதிராளியை நாக்-அவுட்டில் வீழ்த்தியதும் அடங்கும். இந்த நிலையில் 35 வயதான விஜேந்தர் தனது 13-வது தொழில்முறை குத்துச்சண்டையில் ரஷியாவின் ஆர்டிஷ் லோப்சனை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொள்கிறார். 26 வயதான லோப்சன் 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர். தொழில்முறை குத்துச்சண்டையில் 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளார்.

ஓராண்டுக்கு பிறகு களம் திரும்பும் உற்சாகத்தில் உள்ள விஜேந்தர் கூறுகையில், ‘லோப்சன் உயரமானவர். ஆனால் உயரமாக இருப்பது மட்டுமே சாதகமான அம்சம் என்றெல்லாம் சொல்ல முடியாது. குத்துச்சண்டையை பொறுத்தவரை நமது பலத்துக்கு ஏற்ப வியூகம் அமைத்து செயல்பட வேண்டியது முக்கியம். எனது அனுபவத்துக்கு முன் அவர் ஒரு கத்துக்குட்டி. எனது தோல்வியில்லா பயணம் நிச்சயம் தொடரும்’ என்றார். ‘விஜேந்தர் சிறந்த குத்தச்சண்டை வீரர் தான். ஆனால் அவரது ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இங்கு வந்துள்ளேன்’ என்று லோப்சன் சூளுரைத்துள்ளார். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த குத்துச்சண்டை வித்தியாசமாக கோவாவில் ஆற்றுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலின் மேல்தளத்தில் அரங்கேறுகிறது.

Next Story