புதிய தேசிய சாதனையோடு வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி


புதிய தேசிய சாதனையோடு வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 20 March 2021 6:30 AM GMT (Updated: 20 March 2021 6:30 AM GMT)

200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஹிமா தாஸ் (நடுவில்) வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழகத்தை சேர்ந்த தனலட்சுமி, அர்ச்சனா ஆகியோர் பதக்கத்துடன் போஸ் கொடுக்கிறார்கள்.

பாட்டியாலா, 

24-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்தது. 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான வட்டு எறிதலில் பஞ்சாப் வீராங்கனை கமல்பிரீத் கவுர் 65.06 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனையோடு தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். தனது முதல் முயற்சிலேயே நீண்ட தூரம் வீசி அசத்திய 25 வயதான கமல்பிரீத் கவுர் ஜூலை-ஆகஸ்டில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு 63.5 மீட்டர் தூரமாகும். தடகளத்தில் தனிநபர் பிரிவில் இருந்து ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற 10-வது இந்தியர் கமல்பிரீத் கவுர் ஆவார். கமல்பிரீத் வட்டு வீசிய தூரம் புதிய தேசிய சாதனையாகவும் பதிவானது. இதற்கு முன்பு நட்சத்திர வீராங்கனை கிருஷ்ண பூனியா 2012-ம் ஆண்டில் 64.76 மீட்டர் தூரம் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. அந்த 9 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.

ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்று சாதித்தவரான மூத்த வீராங்கனை உத்தரபிரதேசத்தின் சீமா பூனியா வெள்ளிப்பதக்கம் (62.64 மீட்டர்) பெற்றார். இருப்பினும் ஒரு மீட்டர் வித்தியாசத்தில் ஒலிம்பிக் வாய்ப்பை தவற விட்டார். டெல்லி வீராங்கனை சோனல் கோயலுக்கு (52.11 மீட்டர்) வெண்கலப்பதக்கம் கிட்டியது.

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அசாம் வீராங்கனை ஹிமா தாஸ் புதிய போட்டி சாதனையுடன் (23.21 வினாடி) தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். அத்துடன் தகுதி சுற்றில் தன்னை பின்னுக்கு தள்ளிய தமிழக வீராங்கனை திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமியை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். தனலட்சுமி 23.39 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். மற்றொரு தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் வெண்கலப்பதக்கம் (23.60 வினாடி) பெற்றார். இதன் ஆண்கள் பிரிவில் தமிழக வீரர் இலக்கியதாசன் (21.19 வினாடி) தங்கப்பதக்கத்தை வென்றார். மற்றொரு தமிழக வீரர் விக்னேசுக்கு (21.57 வினாடி) வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர்கள் டாப்-3 இடங்களை பிடித்து பதக்கத்தை அறுவடை செய்தனர். தருண் அய்யாசாமி 50.16 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். சந்தோஷ்குமார் (51.49 வினாடி), சதீஷ் (52.11 வினாடி) அடுத்த இரு இடங்களை பெற்றனர். இதன் பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 59.59 வினாடிகளில் ஓடி முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார்.

Next Story