ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து தோல்வி


ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து தோல்வி
x
தினத்தந்தி 21 March 2021 12:52 AM GMT (Updated: 21 March 2021 12:52 AM GMT)

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதியில் சிந்து தோல்வி அடைந்தார்.

பர்மிங்காம், 

மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனும், 7-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து 16-21, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுச்சியை போராடி தோற்கடித்தார். 

இதைத் தொடர்ந்து சிந்து நேற்று நடந்த அரைஇறுதியில் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் போர்ன்பவீ சோச்சுவோங்கை (தாய்லாந்து) எதிர்கொண்டார். எதிராளியின் ஆக்ரோஷமான ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய சிந்து 17-21, 9-21 என்ற நேர் செட்டில் 45 நிமிடங்களில் தோல்வியை தழுவினார். இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் சிந்து இதுவரை அரைஇறுதியை தாண்டியதில்லை. அந்த சோகம் இந்த முறையும் தொடருகிறது. 2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்புக்கு பிறகு சிந்து எந்த பட்டமும் வெல்லவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.


Next Story