உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஆதிக்கம் தொடருகிறது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 March 2021 11:00 PM GMT (Updated: 23 March 2021 9:33 PM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடருகிறது.

புதுடெல்லி, 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 5-வது நாளான நேற்றும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. ‘ஸ்கீட்’ கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கனேமேட் செகோன்-அன்கட் விர்சிங் பாஜ்வா ஜோடி தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இறுதிசுற்றில் விர்சிங் பாஜ்வா இலக்கை குறிதவறாமல் சுட்டு அசத்தினார். ஆனால் கனேமேட் முதலில் சில முறை இலக்கை கோட்டை விட்டாலும், கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு தனது ஆரம்ப தவறுக்கு பரிகாரம் தேடினார்.

முடிவில் கனேமேட் செகோன்-அன்கட் விர்சிங் பாஜ்வா இணை 33-29 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஒல்கா பனாரினா-அலெக்சாண்டர் யாச்சென்கோ ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்தியா வென்ற 7-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

சண்டிகாரை சேர்ந்த இளம் மங்கையான கனேமேட் செகோன் இந்த போட்டியில் ருசித்த 3-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே அவர் ‘ஸ்கீட்’ தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கமும், அணிகள் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தது நினைவிருக்கலாம். 5-வது நாள் முடிவில் இந்தியா 7 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

Next Story