உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கவேட்டை தொடருகிறது


உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கவேட்டை தொடருகிறது
x
தினத்தந்தி 24 March 2021 11:45 PM GMT (Updated: 24 March 2021 9:53 PM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் பதக்கவேட்டை தொடருகிறது.

புதுடெல்லி, 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 6-வது நாளான நேற்றும் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்தது. ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் இலக்கை நோக்கி குறிதவறாமல் சுட்டு கலக்கினார். மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த 20 வயதான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மொத்தம் 462.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற 8-வது தங்கம் இதுவாகும். ஹங்கேரியின் நட்சத்திர வீரர் இஸ்வான் பெனி 461.6 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், டென்மார்க் வீரர் ஸ்டீபன் ஒல்சென் 450.9 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

தகுதி சுற்றில் முதலிடம் பெற்று நம்பிக்கை அளித்த இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் (413.3 புள்ளி) 6-வது இடமும், மற்றொரு இந்திய வீரர் நீரஜ் குமார் (400.3 புள்ளி) 8-வது இடமும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்ட பிரதாப் சிங் தோமர் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். அவர் ஏர்ரைபிள் அணிகள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.

பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் முதல் 3 இடங்களை பிடித்து முழுமையாக கோலோச்சினர். இதன் இறுதி சுற்று முடிவில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த 23 வயது சிங்கி யாதவ், மராட்டியத்தை சேர்ந்த 30 வயது ராஹி சர்னோபாத் ஆகியோர் 32 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர். இதையடுத்து நடந்த டைபிரேக்கரில் சிங்கி யாதவ் 4-3 என்ற கணக்கில் சர்னோபாத்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ராஹி சர்னோபாத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது. மற்றொரு இந்திய வீராங்கனையான 19 வயது மானு பாகெர் (28 புள்ளி) வெண்கலப்பதக்கம் பெற்றார். பதக்கம் வென்ற 3 இந்திய வீராங்கனைகளும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

6-வது நாள் போட்டிகள் முடிவில் இந்தியா 9 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.

பதக்கம் வென்ற இந்தியர்களை பாராட்டியுள்ள மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, ‘டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் நாங்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கிறோம். துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர், வீராங்கனைகள் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.’ என்றார்.


Next Story