உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்
x
தினத்தந்தி 27 March 2021 1:25 AM GMT (Updated: 27 March 2021 1:25 AM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

புதுடெல்லி, 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத்-தேஜஸ்வினி சவாந்த் இணை 31-29 என்ற கணக்கில் உக்ரைனின் செர்ஹி குலிஷ்-அன்னா இலினா ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

3-வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்-சுனிதி சவுகான் ஜோடி 31-15 என்ற கணக்கில் அமெரிக்க இணையை எளிதில் தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கியது.

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) பந்தயத்தின் இறுதி சுற்றில் நீரஜ் குமார், ஸ்வப்னில் குசேல், சைன் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதுடன் 47-25 என்ற கணக்கில் அமெரிக்க அணியை சாய்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்த தொடரில் இந்தியா ருசித்த 12-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீரர் விஜய்வீர் சித்து, எஸ்தோனியா வீரர் பீட்டர் ஒலெக்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் தலா 26 புள்ளிகள் எடுத்து சமநிலை வகித்தனர். இதையடுத்து நடந்த ‘டைபிரேக்கரில்’ பீட்டர் ஒலெக்ஸ் 4-1 என்ற கணக்கில் சித்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். விஜய்வீர் சித்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. போலந்து வீரர் ஆஸ்கர் மிலிவிக் வெண்கலப்பதக்கம் பெற்றார். இந்த பந்தயத்தில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் அனிஷ் பன்வாலா 5-வது இடமும், குர்பிரீத் சிங் 6-வது இடமும் பிடித்து பதக்கத்தை கோட்டை விட்டனர்.

8-வது நாள் போட்டிகள் முடிவில் இந்தியா 12 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.

Next Story